அஹமதாபாத்: சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனை காரணமாக வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் செசன்ஸ் கோர்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந் தேதியன்று கர்நாடக மாநிலம், கோலாரில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லா திருடர்களும் தங்கள் பெயருக்குப்பின்னே மோடியை பொதுவான பெயரையே வச்சிருக்காங்க” என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து ராகுல் காந்தி பேசிய இந்தப் பேச்சு, பெருத்த சர்ச்சையானது.
குஜராத் அமைச்சர்
இது தொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத்தின் சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுத்தார். அவர் தனது மனுவில் ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
ராகுல் காந்தி குற்றவாளி
இந்த வழக்கைப் பரிசீலித்த நீதிமன்றம், இதில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.வர்மா விசாரித்தார். விசாரணைக்கு பின்னர் மார்ச் 23ம் தேதி தீர்ப்பளித்தார்.
நீதிபதி தீர்ப்பு குறித்து கூறுகையில், ராகுல் காந்தி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது . ராகுல் காந்தி குற்றவாளி , அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றார்.
மோசமான முன்ணுதாரனம்
சூரத் நீதிமன்றம் தனது தீர்ப்பில், ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டாலும் அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் எம்.பி. என்ற தகுதியில் மக்களிடம் பேசும் ஒரு எம்.பி. மற்றும் சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறார், எனவே இந்த குற்றத்தின் விளைவுகள் இந்த வழக்கில் மிகவும் விரிவானது. அவருக்கு தண்டனையை குறைப்பது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சமூகத்தில் ஒரு எதிர்மறை செய்தி.அதை மனதில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது” என்று சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2ஆண்டு சிறை தண்டனை ஏன் என்பது குறித்து தீர்ப்பில் விளக்கம் அளித்திருந்தது. அதேநேரம் ராகுல் காந்திக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் தண்டனயை நிறுத்தி வைத்ததுடன், ஜாமீனும் வழங்கியது
லோக்சபா
இந்நிலையில் சூரத் நீதிமன்றம் மோடி குறித்து அவதூறாக பேசியதாக 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த மறுநாளே மார்ச் 24ம் தேதியே மக்களவை செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. அத்துடன் வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக லோக்சபா அறிவிப்பும் வெளியிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை வயநாடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கவில்லை. அண்மையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், இறுதி தீர்ப்புக்கு பின்னரே இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என விளக்கம் அளித்தது. இதனிடையே எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரைஅரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்றுக்கொண்ட ராகுல் காந்தி, விதிகளின் படிசெயல்படப்போவதாக கூறினார்.
நாளை விசாரணை
இந்நிலையில் அவதூறு வழக்கில் தனக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு திங்கள்கிழமை நீதிமன்றம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.