நெல்லை: பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடிநீர் தேவையை சமாளிக்க இரு அணைகளில் இருந்தும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த மாவட்டங்களாகும். பாபநாசம் அணை தான் இந்த 3 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ நெல் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான பருவ நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஒவ்வொரு பருவ சாகுபடியின் போதும் தண்ணீர் திறக்கப்படும். வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதல் மழை கிடைக்கும். இந்த பருவமழை காலத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வழிந்து குளங்களும் நிரம்பி விடும்.
இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பாமல் போனது. மணிமுத்தாறு அணை 100 அடியைக் கூட தாண்டவில்லை. இந்நிலையில் பிசான பருவ நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக மார்ச் 31ம் ேததி வரை பாபநாசம் அணை தண்ணீர் பிசான பருவ நெல் சாகுபடிக்கு வழங்கப்படும். இந்தாண்டு அணையில் நீரிருப்பு மிகவும் குறைந்ததால் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 21.15 அடியாக குறைந்துள்ளது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் பாபநாசம் அணை வறண்டு சிறிய குட்டை போன்று காட்சியளிக்கிறது. அணை பகுதியிலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் கடும் வெயில் காரணமாக நீர்வரத்து குறைந்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2.32 கன அடி நீர் மட்டுமே வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 104 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 42.62 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.75 அடியாக உள்ளது, அணைக்கு விநாடிக்கு 2 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு குறைந்து விட்ட நிலையில், மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பை வைத்தே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் குடிநீர் தேவையை சமாளிக்க வேண்டியுள்ளது. ஏப்ரல், மே மாதங்கள் கடும் கோடை காலமாகும். இந்த மாதத்தில் மழை கிடைக்க வாய்ப்பு இல்லை. கோடை மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து இருக்கும். ஜூன் மாதம் தான் அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும். எனவே பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய 2 அணைகளிலும் இருந்து குடிநீர் தேவைக்கு மட்டும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக ஆற்றில் சல, சல என்ற சத்தத்துடன் தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் தற்போது நீர்வரத்து குறைவு காரணமாக மிகக் குறைந்த அளவே தண்ணீர் ஆற்றில் செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆறு ஆரவாரமின்றி காட்சியளிக்கிறது.