நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த இறுதி முடிவை தற்போதே எடுக்க முடியாது: அண்ணாமலை

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான இறுதி முடிவை தற்போது எடுக்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து அமித்ஷாவிடம் 2 மணி நேரம் பேசி உள்ளேன். கூட்டணி உறுதி என அமித்ஷா கூறுகிறார் என தெரிவிக்கும் நபர்கள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என அவர் கூறி உள்ளார். நானும் அதைத்தான் கூறுகிறேன்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது என தற்போது கூற முடியாது. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன போன்றவை எல்லாம் உள்ளது என்பதால் தற்போதே கூட்டணி உறுதி என கூற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட அனுமதி வழங்கினால் நேர்மையான அரசியலை நோக்கி பயணம் செய்வேன். அதில் தோல்வி கிடைத்தாலும் கட்சியின் வளர்ச்சிக்கு அதுதான் உதவும். தற்போது செய்யும் அரசியல் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது. எனவே மாற்றம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தேசிய தலைவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதை ஏற்று பயணம் செய்வோம்.” என்று தெரிவித்தார்.

9 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயம் செய்து உள்ளோம் என்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு தொடர்பான கேள்விக்கு,”பாஜக தற்போது தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் வேகமாக வளர்ந்து வருகிறது. 9 தொகுதிகளில் கட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றே முருகன் கூறி இருப்பார். அந்த தொகுதிகளில் மட்டும்தான் பணி செய்கிறோம் என்று அர்த்தம் இல்லை” என்று தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பான கேள்விக்கு,”ஆன்லைன் ரம்மி விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசு ஒரு சரியான சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் உச்ச நீதிமன்றம் மீண்டும் இதை தடை செய்யும். GAME OF CHANCE என்ற முறையில் சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இதை தடை செய்ய முடியும். GAME OF SKILL என கொண்டு வந்தால் தடை செய்ய முடியாது. ஆன்லைன் ரம்னியை தடை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு,”ஆருத்ரா போன்ற எந்த நிறுவனமாக இருந்தாலும் முதலில் பணம் செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். அவர்களை கைது செய்து வசூலித்தாலும் 5%விததிற்கு மேல் கிடைக்காது. எனவே மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். பாஜக உள்ளிட்ட எந்த கட்சியை சார்ந்த நிர்வாகி இதில் சம்பத்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.