திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை சற்று அதிகரித்து காணப்படும். இதனால் தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதன்படி, சனிக்கிழமையான நேற்று முன்தினம் 75 ஆயிரத்து 510 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இவர்களில் 36 ஆயிரத்து 272 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.69 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 21 அறைகள் நிரம்பியது. இதனால், பக்தர்கள் சுமார் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.