சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 29ம் தேதி நடைபெற்றது.
இதில், இயக்குநர் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், கமல், சிம்பு, பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு நடிகர் பார்த்திபன் க்யூட்டாக ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இம்மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு மார்ச் 29ம் தேதி பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் மூன்றே தினங்களில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது. அதேபோல், பொன்னியின் செல்வன் 2 பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

பொன்னியின் செல்வன் 3ம் பாகம்
PS 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். மேலும், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல், சிம்பு, இயக்குநர் பாரதிராஜா ஆகியோரும் பங்கேற்றனர். பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியானதும், கமலின் KH 234 படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். இதனிடையே பொன்னியின் செல்வன் 3ம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

PS 3 பார்த்திபன் ரியாக்ஷன்
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் இவரது போர்ஷன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் பார்த்திபனின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 3ம் பாகம் குறித்து ரசிகர்கள் பார்த்திபனிடம் கேட்க, அதற்கு அவர் க்யூட்டாக பதிலளித்துள்ளார். “பொன்னியின் செல்வன் பார்ட் 3 எடுக்க இருக்கிறதா கேள்வி. இருந்தா மகிழ்ச்சி!” என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாய்ப்பே இல்லை ராசா
ஆனால், பொன்னியின் செல்வன் 3ம் பாகம் உருவாக வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வன் ப்ராஜக்ட்டை கையில் எடுக்கும் போதே, இது இரண்டு பாகங்கள் தான் முடிவு செய்துவிட்டார் மணிரத்னம். மேலும், லைகாவும் இரண்டு பாகங்களுக்கு மட்டும் பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் மொத்தமாகவே ஷூட் செய்துவிட்டார் மணிரத்னம். அதனால், மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

விரைவில் ப்ரோமோஷன்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து விரைவில் பொன்னியின் செல்வன் 2-க்கான ப்ரோமோஷன் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் வெளியாகும் போது நடந்ததை போன்றே இம்முறையும் சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெறும் என சொல்லப்படுகிறது.