கூட்டு பலாத்காரம் செய்து 17 பெண்கள் படுகொலை: குஜராத் கலவர வழக்கில் 26 பேர் விடுதலை

கோத்ரா: குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது கடந்த 2002ல் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.  இது தொடர்பாக பல வழக்குகளின் விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இவற்றில் கலோல், டிலோஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய விசாரணையும் நடந்து வந்தது. அங்கு 17 முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 2022ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி எப்ஐஆர் பதியப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 190 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 334 ஆவணங்கள் சாட்சிகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி லீலாபாய் சுதாசமா, “குற்றம்சாட்டப்பட்ட 26 பேர் மீதான கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஆவணங்கள் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை,’’ என கூறி குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் மொத்தம் 39 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 13 பேர் வழக்கு விசாரணையின் போது மரணம் அடைந்துவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.