தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவு

சேலம்: தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை, வீடு, வீடாக சென்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை (மாற்றுக் திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிய சிறப்புக் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகள் அருகாமையிலுள்ள பள்ளியில் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுவர். அதன்படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கான, 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி, குடியிருப்பு வாரியாக நடத்தப்படவுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுப்பு மற்றும் ஆரம்பக் கல்விப் பதிவேடு புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள வேண்டும்.  நடப்பாண்டு கணக்கெடுப்பு நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இளம்பகவத் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் நடப்பாண்டு பள்ளிசெல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணியினை தொடங்குவதற்கு முன்பு, மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்பு விவரங்களை ஊரக வளர்ச்சி, நகராட்சி, மாநகராட்சி துறையினரிடமிருந்து பெற்று இறுதி செய்ய வேண்டும்.  மேலும் புதிய குடியிருப்புகள் மற்றும் ஏற்கனவே மேப்பிங் செய்வதற்காக கொடுக்கப்பட்ட குடியிருப்பு பட்டியலை, வட்டாரத்திற்கு அனுப்பி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும். இதில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் வேண்டும்.

குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த 6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிந்து பதிவு செய்யப்பட வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு பணியினை, மாவட்ட கலெக்டரின் தலைமையில் பிற துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி திட்டமிட வேண்டும். கடந்த 2022-23ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது பள்ளியில் சேர்க்கப்படாத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பின் போது கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களில், ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களையும் சேகரிக்க வேண்டும். கண்டறியப்படும் அனைத்து பள்ளி செல்லா குழந்தைகளும், அருகாமையிலுள்ள பள்ளிகளில் உடனடியாக சேர்க்க வேண்டும்.

 இந்த கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் மாத முதல் இரண்டு வாரங்களிலும், மே மாத இறுதி வாரத்திலும் நடைபெற வேண்டும். ஆசிரியர்கள் கற்றல்-கற்பித்தல் பணிகள் பாதிக்காத வண்ணம், கள அளவில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். 2023-2024ம் கல்வியாண்டிற்கு ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் குறித்து தலைமையாசிரியர்களுக்கு அறிவறுத்த வேண்டும். பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள (12ம் வகுப்பு வரை) மாணவர்களின் விவரங்கள் ஆரம்ப கல்வி பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும். வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு செய்யும்போதே பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை, செயலியில் உரிய முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

* அனைத்து தரப்பினரையும் சேர்க்க அறிவுறுத்தல் கணக்கெடுப்பின்போது, நடைபாதையில் வசிப்பவர்கள், மேம்பாலங்களின் கீழ் வசிக்கும் வீடற்றவர்கள், போக்குவரத்து சிக்னலின் இடையே காணப்படும் விற்பனையாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களிருந்து இடம் பெயர்ந்தவர்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் குடும்பங்களிலும், பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளனரா என்பதனை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசைப் பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சந்தைகள், ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிகள், சுற்றுலா தளங்கள், செங்கல் சூளைகள், கட்டுமானப் பணிகள், அரிசி ஆலை, கல்-குவாரி, மணல்குவாரி தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்கள், மாவட்டத்திலிருந்து தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வருகின்றனர். தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தும் போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து, ஆய்வு நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.