தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையப்போவது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். படத்தின் க்ளைமேக்சில் சில நிமிடங்களே சூர்யா திரையில் தோன்றினாலும் மனதில் நிலைத்து நிற்கும்படி படத்தில் இவரது கதாபாத்திரம் அமைந்து இருந்தது. இந்நிலையில் சூர்யாவுடன், லோகேஷ் கைகோர்க்க போகும் புதிய படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், புதிய திரைப்படமாக சூர்யாவின் ஸ்பின்ஆஃப் கேரக்டர் உருவாக்கப்படும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சூர்யாவை வைத்து தான் படம் இயக்கப்போவதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சூர்யாவுடன் இணைந்து புதிய படத்தின் பணிகளை தொடங்குவது குறித்து சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் இயக்குனர் லோகேஷ் பேசியிருந்தார். அவர் கூறுகையில் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தபோது, தான் சூர்யாவுடன் இரண்டு நாட்கள் மட்டும் தான் வேலை செய்தேன் என்றும் சூர்யாவை வைத்து விரைவில் முழு நீள படமொன்றை எடுப்பேன் என்றும் கூறினார். மேலும் அந்த படத்தின் படப்பிடிப்பு 150 நாட்கள் வரையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். லோகேஷ்-சூர்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான பிறகு சூர்யாவை வைத்து ‘இரும்பு கை மாயாவி’ எனும் படத்தை எடுக்க நினைத்தார், ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் லோகேஷ்-சூர்யா இணைவதாக கூறப்படும் படம் ‘இரும்பு கை மாயாவி’ படமாக இருக்குமா அல்லது ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி இருக்குமா என்று பலரும் யோசித்து வருகின்றனர். தற்போது லோகேஷ் ‘லியோ’ படத்தின் பணியிலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘சூர்யா42‘ படத்திலும் பிசியாக இருப்பதால், இந்த இரண்டு படங்களும் திரைக்கு வந்த பிறகு இருவரும் புதிய படத்திற்கான பணியில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.