பெங்களூரு,: மற்ற நாடுகள் குறித்து விமர்சிப்பது கடவுள் கொடுத்த உரிமை என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாக ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு பாஜ ஏற்பாடு செய்திருந்தது. கப்பன் பூங்காவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்முறை வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் உள்பட ஏராளமான இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு வாக்காளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, மற்ற நாடுகளை பற்றி விமர்சிக்கும் கெட்ட பழக்கம் வௌிநாடுகளுக்கு இயல்பாகவே உள்ளது. அதை கடவுள் கொடுத்த உரிமை என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் இதை தொடர்ந்து செய்தால் பிற நாடுகளும் அவர்களை பற்றி விமர்சனம் செய்யும். அப்போது அது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனுபவம் தான் அவர்களுக்கு கற்று தர வேண்டும்.
இரண்டாவது காரணம், நம் நாட்டில் நடக்கும் பிரச்னைகள் குறித்து வௌிநாடுகளுக்கு செல்லும்போது நாமே அவர்களுக்கு வாய்ப்பு தருகிறோம். இங்கிருந்து செல்பவர்களிடம் பிரச்னை பற்றி ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்கும்போது, நாம் பதில் சொல்கிறோம். இரண்டு காரணங்களுமே வௌிநாட்டினரின் தலையீட்டுக்கு காரணம். இது சரி செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.