நெல்லை: பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கும் 2023-24 பட்ஜெட் அறிவிப்பு, ஏப்.1 முதல் அமலுக்கு வந்தது. இதற்கான சந்தை வழிகாட்டி மதிப்பை அமல்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கி பதிவுத்துறை ஐஜி சிவன்அருள் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனைத்து சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத்துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2023-24ம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட்டில் பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைப்பதாக நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் அறிவித்தார். இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மதிப்பீட்டு குழுவில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது. 2023 ஏப்.1 முதல் சந்தை வழிகாட்டி மதிப்பை, 2017 ஜூன் 8 வரை கடைபிடிக்கப்பட்டுவந்த சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக மாற்றப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு முழுவதும் உள்ள 54 பதிவு மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம புல எண்கள் மற்றும் தெருக்கள் அல்லது நகர்களுக்கும் பொருந்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த மதிப்புகள் கணினியில் 2023 ஏப்.1 முதல் மாற்றம் செய்யப்படும். 2017 ஜூன் 9ம் தேதி அல்லது அதன் பின்பு விளைநிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டுள்ள நிகழ்வில் நிர்ணயிக்கப்பட்ட மனை மதிப்பானது 2017 ஜூன் 8ம்தேதி இருந்த மதிப்புடன் ஒப்புநோக்கப்பட்டு, இவற்றில் எது அதிகமோ அதனை வழிகாட்டி மதிப்பாக இருத்திக்கொள்ள வேண்டும். இதனை நிறைவேற்ற ஸ்டார் 2.0 மென்பொருளில் Fixation Module மூலமாக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட வழக்குகளுக்கு மதிப்பு ஏற்றம் செய்யப்படாமல் முன்புள்ள வகைபாடும் மதிப்புமின்றி சர்வே எண் மட்டும் கணினியில் ஏற்றப்படும்.
மனைமதிப்பு நிர்ணயம் மாவட்டப் பதிவாளர்களால் செய்யப்பட்டு உள்ளதால் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்ட மதிப்பை கணினியில் உட்புகுத்திட மாவட்டப் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு புதிய வகைபாடு தேவைப்பட்டால் துணை பதிவுத்துறை தலைவரிடம் பெற்றுக் கொள்ளலாம். இப்பணியானது 2023 ஏப்ரல் 6ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மாவட்ட பதிவாளர்களால் உள்ளீடு செய்யப்பட்ட மதிப்பு விவரத்தை சம்பந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர்கள் சரிபார்த்து அவற்றை பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஸ்டார் 2.0 மென்பொருளில் Fixation Module மூலமாக மதிப்பு நிர்ணயம் செய்யப்படாத வழக்குகளுக்கு இவை மதிப்பு நிர்ணய வழக்குகள் என கணினியில் கண்டுபிடிக்க இயலாததால் 2017 ஜூன் 8 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக தற்போதைய சந்தை வழிகாட்டி மதிப்பு இணையதளத்தில் மாற்றப்படும். இவ்வகை வழக்குகளுக்கு சரியான மதிப்பை இணையதளத்தில் சரிசெய்ய துணை பதிவுத்துறை தலைவர் வழி உரிய ஆதாரங்களுடன் பதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையானது 2023 ஏப்ரல் 10ம் தேதிக்குள் இவ்வலுவலகத்தில் பெறப்பட வேண்டும். பின் இவை சரிபார்க்கப்பட்டு சரியான மதிப்பு இணையதளத்தில் மாற்றி அமைக்கப்படும்.
மாவட்ட பதிவாளர்களால் உட்புகுத்தப்பட்ட மனைமதிப்பு நிர்ணய விவரங்களை தணிக்கையின்போது சரிபார்த்து அவற்றில் வேறுபாடு ஏதும் இருந்தால் பதிவுத்துறை தலைவரின் நேரடி கவனத்திற்கு கொண்டுவர அனைத்து தணிக்கை மாவட்ட பதிவாளர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 2023 ஏப்.1 முதல் இணையதளத்தில் மாற்றப்படும் சந்தை வழிகாட்டி மதிப்பு, அரசு அறிவிப்பில் தெரிவித்தவாறு 2017 ஜூன் 8ம் தேதியன்று இருந்த மதிப்பிற்கு ஈடாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தபட்ட சார்பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.