Karnataka Election: முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பம்மும் பாஜக; இது தான் காரணமாம்.!

கர்நாடகா தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது.

கர்நாடகா தேர்தல்

கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபொல் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும். ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி உள்ளது.

சர்வே முடிவுகள் சொல்வது என்ன.?

Edupress group கர்நாடகாவின் 50 தொகுதிகளைச் சேர்ந்த 18,331 வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்தியது. அந்தவகையில் கடந்த மார்ச் 25 முதல் 30ஆம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், பாஜக 110-120 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 70-80 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 10-15 இடங்களையும் மற்றவை 4-9 இடங்களையும் கைப்பற்றக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவில் கர்நாடகாவில் மொத்த வாக்குகளில் பாஜக 43 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 37 சதவீத வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிங் மேக்கர் குமாரசாமி

கடந்த முறை போலவே, இந்த தேர்தலிலும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து விதமான கருத்து கணிப்புகளிலும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வரானார். அதேபோல் தான் தற்போதும் அமையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தான் இந்த முறையும் கிங் மேக்கராக இருப்பார் என கூறப்படுகிறது.

காங்கிரஸில் சண்டை

காங்கிரஸ் கட்சியில் முதல்வர் ரேஸில் மூன்று முக்கிய தலைவர்களிடையே பஞ்சாயத்து உள்ளது. மாநில தலைவரான டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் பரமேஷ்வரா ஆகியோரிடையே முதல்வர் பதவிக்கான போட்டி உள்ளது. அதனால் காங்கிரஸ் கட்சி தனது முதல்வர் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

பின்வாங்கும் பாஜக

கடந்த 2018 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பாவை அறிவித்து தான் தேர்தலை சந்தித்தது பாஜக. ஆனால் இப்போது முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தயக்கம் காட்டி வருகிறது. ஏனெனில் எடியூரப்பாவிற்கு அடுத்தபடியாக மக்களுக்கு நன்கு பரிட்சையமான முகமாக பாஜகவில் யாரும் இல்லை. தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையை மக்கள் அதிகம் விரும்பவில்லை என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அதனால் தான் பாஜக தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

பசவராஜ் பொம்மை, பிஎஸ் எடியூரப்பா, பிஎல் சந்தோஷ் ஆகியோர் தனித்தனியாக உள்ளனர். அதேபோல் சில கேபினட் அமைச்சர்களும் உள்ளனர், அவர்கள் தங்களை முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக கருதுகின்றனர்.

மூத்த பாஜக தலைவர்களான பசனகவுடா ஆர் பாட்டீல், கேஎஸ் ஈஸ்வரப்பா, ஏஎச் விஸ்வநாத், சிபி யோகேஸ்வரா போன்றவர்களுக்கும் வலுவான ஆதரவுத் தளம் உள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாஜக எந்த ஒரு முகத்தையும் வேட்பாளராக அறிவித்தால், அது ஏனைய குழுக்களின் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.