சென்னையில் வாகன சோதனையின்போது இரண்டு கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை வடக்கு கடற்கரை போலீசார், பாரிமுனை ராஜாஜி சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ஆட்டோவில் இருந்த வாலிபர் ஒருவர் கையில் வைத்திருந்த பார்சலுடன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து போலீசார் வாலிபரை விரட்டிச் சென்றதில், கையில் வைத்திருந்த பார்சலை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து வாலிபர், மின்சார ரயில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வாலிபர் கீழே வீசிவிட்டுச் சென்ற பாசலை பிரித்து பார்த்ததில் இரண்டு கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததில் தப்பி ஓடிய வாலிபர் பாரிமுனையில் இருந்து மண்ணடிக்கு சவாரி அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய வாலிபர் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.