காரைக்குடி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது; ஆனால் திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
காரைக்குடியில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. கோலாருக்கும் சூரத்துக்கும் என்ன தொடர்பு?
ராகுல் காந்தி மீதான அவதூறு கிரிமினல் வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது; ஒரு ஆண்டு, இந்த வழக்கு விசாரணைக்கு தடையும் இருந்தது. ஆனால் திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருக்கின்றனர். அப்படி என்ன அவசரம்? ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து கையெழுத்திடவில்லை என கூறினார் ப.சிதம்பரம்.