பொள்ளாச்சி: பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் இது திமுக ஆட்சியில் நிறைவேறும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. தமிழகத்தில் விவசாயம் நிறைந்த பகுதிகளின் ஒன்றாக, கோவை மாட்டம் பொள்ளாச்சியும் விளங்குகிறது. 1857ம் ஆண்டு முதல் வருவாய் கோட்டமாக பொள்ளாச்சி இருந்தது. இந்த வருவாய் கோட்டத்தில் பல ஆண்டுகளாக பொள்ளாச்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை உள்ளிட்ட தாலுகா பகுதியும் அடங்கியது. இதில், சுமார் 110க்கும் மேற்பட்ட கிராமங்கள் என அதிக கிராமங்கள் கொண்ட தாலுகாவாக பொள்ளாச்சியே விளங்கியது. பொள்ளாச்சியானது, வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில், விவசாயம் நிறைந்த பகுதியாகவே அமைந்தது. இதற்கிடையே, கடந்த 2009ம் ஆண்டு கோவையிலிருந்து பிரக்கப்பட்டு திருப்பூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதில், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துடன் இருந்த உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்டவை திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், கோவை மாவட்டத்துடன் பொள்ளாச்சி வருவாய் கோட்டமாக இருந்தாலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட சில அலுவலகங்களை தவிர, கோவையில் இருக்கும் அனைத்துத்துறை அரசு அலுவலகங்கள் போல் பொள்ளாச்சி மையப்பகுதியிலேயே அமையபெற்றுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டம் என்பதால், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், பிஏபி தலைமை அலுவலகம், வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோர்ட்டுகள், பொள்ளாச்சி போலீஸ் சரகம், கிளைச்சிறை, ரயிவே ஸ்டேஷன், கூட்டுக்குடிநீர் திட்டம், தென்னை வளர்ச்சி வாரியம் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. தென்னிந்தியாவில் பெரிய காய்கறி மார்க்கெட், மாட்டுசந்தை உள்ளிட்டவை இங்கே அமையபெற்றுள்ளது. அதுமட்டுமன்றி, தென்னை சார்ந்த விவசாயம் அதிகமாக இருப்பதுடன், பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக உடுமலை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில்தான் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகளவு உள்ளன. சுமார் 350க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்படுவதால், இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சியிலிருந்துதான் அதிளவு தென்னை நார் மற்றும் நார் கழிவுகள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு காலத்தில், பொள்ளாச்சியை பொருளாட்சி என்று அழைப்பார்கள். அத்தகைய சொல், இப்போதைய பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ளது எனலாம்.நகரின் மையப்குதியில் இரு பஸ் நிலையங்கள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைகேற்பவும், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக, புதிய பஸ் நிலையம் விரைவில் அமைய உள்ளது.
பொள்ளாச்சி தாலுகா வளாகத்தில் செயல்பட்டு வரும் ஜேஎம்1, ஜேஎம்2, சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் முதன்மை நீதிமன்றம், மாவட்ட கூடுதல் உரியமையில் நீதிமன்றம், உள்ளிட்ட நீதிமன்றங்கள் ஒருங்கே அமைய, சிடிசி மேட்டில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடம் அருகேயே, கோவையில் அமைந்துள்ளது போல், அனைத்து வசதிகளுடன் சுமார் ரூ.35கோடிக்கு மேல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் மையபகுதியிலிருந்து பிரிந்து செல்லும் கோவைரோடு, பாலக்காடுரோடு, மீன்கரைரோடு, வால்பாறைரோடு, பல்லடம்ரோடு, உடுமலைரோடு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலை ரோடுகளும் வாகன போக்குவரத்து வசதிகேற்ப விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியிலிருந்து, உடுமலை, மடத்துக்குளம், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் புறவழியாக, திண்டுக்கல் வரையிலும் பல்வேறு வசதிகளுடன் நெடுஞ்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனால், பொள்ளாச்சி பகுதி மேலும் வளர்ச்சியடையும் பகுதியாக அமைந்துள்ளது.
இதில் முக்கியமானதான சுற்றுலா பகுதிகள் பொள்ளாச்சியை தொட்டுதான் உள்ளது. அதிலும், டாப்சிலிப், வால்பாறை, சின்னக்கல்லார், ஆழியார் உள்ளிட்ட சுற்றுலா தளங்களால், பொள்ளாச்சியை சுற்றிலும் ஒரு சுற்றுலா தலமாகவே கருதப்படுகிறது. அதிலும், பொள்ளாச்சி மற்றும் உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 6சட்டமன்ற தொகுதிகளை சேர்த்து பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியாக செயல்பட்டு வருகிறது. இத்தகையை அனைத்து சிறப்பம்சங்களும் ஒருங்கே நிறைந்த, கோவை மாவட்டத்துடன் உள்ள பொள்ளாச்சியை பிரித்து, பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து முன் வைத்துள்ளனர். ஒரு மாவட்டம் உருவாக சுமார் 2500கிலோ மீட்டர் பரப்பளவு தேவை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக பிரித்து, அதில் பொள்ளாச்சி வால்பாறை, ஆனைமலை, உடுமலை, கிணத்துக்கடவு, மடத்துக்குளம் உள்ளிட்ட தாலுகாக்களை இணைக்கும்போது, சுமார் 2700கிலோ மீட்டர் பரப்பளவு இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் 10லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்கும் என்பதாலும், பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்து பொதுமக்கள் மாவட்ட கலெக்டரை சந்திக்க பலகிலோ மீட்டர் கடந்து செல்வதை தவிர்க்க, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க எந்தவித தயக்கமும் தேவையில்லை என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. திமுக அரசு அமைந்தவுடன் பொள்ளாச்சியை தனி மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை வீண் போகாத வகையில், நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, பழனி, கோவில்பட்டி, கும்பகோணம், ஆரணி, பொள்ளாச்சி உள்ளிட்ட 8மாவட்டங்களை புதிதாக உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற தகவலை அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இதனால், பொள்ளாச்சி தனி மாவட்டமாகும் என்ற பல ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே நிலவியுள்ளது. திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் மெடிக்கல் பரமசிவம் கூறுகையில், ‘பொள்ளாச்சி தனி மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என, சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது, பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக விவசாயிகளின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. பிஏபி திட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையார், ஆழியார், திருமூர்த்தி மற்றும் அமராவதி உள்ளிட்ட அணைகள் ஒரே மாவட்டத்தில் அமைய பெற வேண்டும் என்பதால், பொள்ளாச்சியுடன் மடத்துக்குளம், உடுமலையையும் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். பிஏபி தலைமை அலுவலகம் பொள்ளாச்சியில்தான் உள்ளது என்பதால், விவசாயிகளுக்கு எந்தவித பிரச்னையும் இருக்காது. பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்கினால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இந்த எதிர்பார்ப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார். திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் கேஎம் நாகராஜன் கூறுகையில், ‘பொள்ளாச்சி மாவட்டமாகும்போது, விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான தென்னை மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் முன்னேற்றமடையும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேலோங்கும். மேலும், அதற்கு அடுத்தப்படியாக உள்ள கைத்தறி நெசவு தொழிலும் சிறப்பாக செயல்பட்டு, அதிக உற்பத்தியும், விற்பனையும் பெருகுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதுபோல், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டம் மற்றும் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் தனித்துவமாக செயல்படும்.
பொள்ளாச்சி தனி மாவட்டமாக வேண்டும் என்பது, ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்பாக உள்ளதால், நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்ட தொடரிலே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். கொமதேக மாவட்ட செயலாளர் நித்தியானந்தம்கூறுகையில், ‘பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. மக்கள் தொகை குறைவாக கொண்ட பகுதியே மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் தொகையில் அதிகம் மற்றும் பொருளாதாரத்திலும் தகுதியான பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவித்தால், விவசாயம் சார்ந்த தொழிற் வளர்ச்சி மேலும் வளரும். விவசாய மக்களின் வாழ்வாதாரம் உயரும். விவசாயம் ஒருபக்கம் இருந்தாலும், பொள்ளாச்சியை சுற்றுலா பகுதி என்றே அழைப்பார்கள். பொள்ளாச்சி மாவட்டமாகும்போது, பொருளாதாரம் மேலும் உயரும். அனைத்து துறை அலுவலகங்களும் பொள்ளாச்சியிலேயே அமைந்துள்ளதால், பொள்ளாச்சி மாவட்டத்திற்கான வளர்ச்சி பணிகள் விரைந்து நடைபெறும். அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு உடன் கிடைக்கபெற வாய்ப்பாக இருக்கும். மாவட்டத்திற்கென புது திட்டங்கள் உருவாகும். தமிழகத்தின் சிறந்த மாவட்டமாக பொள்ளாச்சி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.