சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி மற்றும் துணை ஆணையர் ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் இன்று காலை ஆஜராகி தலைவி குமாரியிடம் விளக்கம் அளித்தனர்.
மகளிர் ஆணையம் விசாரணை
அப்போது சில ஆவணங்கள் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவி குமாரி, கல்லூரியில் ஐசிசி (Internal Complaints Committee) கமிட்டி இருக்கிறதா? சரியாக வேலை செய்கிறதா? மாணவிகளிடம் இருந்து இத்தனை ஆண்டுகளாக கிடைத்த புகார்கள் என்னென்ன? அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
புகார் வரவில்லை
அதற்கு சமீபத்தில் சலசலப்புகள் தொடர்பாக புகார்கள் எதுவும் வரவே இல்லை என்று இயக்குநர் பதிலளித்தார். இன்றைய தினம் ரேவதியிடம் நடத்தப்பட்ட விசாரணை அல்ல. சில விஷயங்களை கேட்டு தெளிவு பெறவே வரவழைக்கப்பட்டார். ஐசிசி கமிட்டி பற்றியே அதிகம் கேட்டோம். அதுதொடர்பான ஆவணங்களை அடுத்த சில நாட்களில் சமர்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். மாணவ, மாணவிகளுக்கு வரும் 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
3 பேருக்கு தடை
அதனால் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மாணவிகள் புகார் அளித்த 4 பேரில் ஹரி பத்மன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூன்று பேரையும் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாணவ, மாணவிகள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்கப் போவதாக தகவல் கிடைத்தது.
ஆஃப்லைன் தேர்வுகள்
ஆன்லைனின் தேர்வுகள் வேண்டாம். ஆஃப்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று பிற்பகலுக்குள் வழங்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. எனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் அறிக்கையை தமிழக அரசிடம் இன்றைய தினமே சமர்பித்து விடுவேன்.
சட்ட நடவடிக்கை
அதன்பிறகு சட்ட ரீதியிலான நடவடிக்கையை அரசு பார்த்துக் கொள்ளும். மாணவிகளுக்கு என்னுடைய செல்போன் எண், இ-மெயில் முகவரி அளித்துள்ளேன். அதன்மூலம் எனக்கு சில புகார்கள் வந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக கல்லூரியில் ஐசிசி கமிட்டியை பலப்படுத்த அறிவுறுத்தியுள்ளேன்.
மாணவிகளுக்கு விழிப்புணர்வு
இதுபற்றி புதிதாக வரும் மாணவர்களுக்கு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டதாக குமாரி தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை போன்ற பாதிப்புகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்.
தலைவர், கலச மஹால், முதல் மாடி, சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு கடிதம் மூலம் புகார் அளிக்கலாம். இல்லையெனில் [email protected] என்ற இணையதள முகவரியிலோ அல்லது 044-28551155 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.