திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வீரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (33). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உறவு பெண்ணான சித்ரா (27) என்பவருடன் அண்மையில் திருமணம் முடிந்திருக்கிறது. தற்போது தனியார் வங்கியில் கடன் தவணையை வசூலிக்கும் பணியில் இருந்தார். திருமணம் முடிந்து 5 மாதங்களேயான நிலையில், ராஜசேகரன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது, செம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து செம்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம். “ராஜசேகரன் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கிப் பழகியிருக்கின்றனர். இந்த நிலையில், திடீரென ராஜசேகரன் தனது வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார். இங்கு உறவுக்காரப் பெண்ணுடன் திருமணம் முடிந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.
இதற்கிடையே தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த பெண், ராஜசேகரனிடம் தன்னை காதலித்து சேர்ந்து வாழ்ந்துவிட்டு, வேறு பெண்ணை மணந்து கொண்டுவிட்டதாகக் கூறி பிரச்னை செய்திருக்கிறார். மேலும் ராஜசேரனின் மனைவி, உறவினர்கள் எண்களை வாங்கி அவர்களுடைய வாட்ஸ்அப்பில் ராஜசேகரனுடன் சேர்ந்து இருந்த புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார்.

இதனால் ராஜசேகரன், சித்ரா தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் சித்ரா கோபித்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்தப் பிரச்னையில் மனமுடைந்து காணப்பட்டுவந்த ராஜசேகரன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்” என்றனர்.
திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதற்கு முன்னாள் காதல் விவகாரம்தான் காரணமா அல்லது வேறு பிரச்னையால் இறந்தாரா என்ற கோணத்தில் செம்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.