ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத அணி ராயல் சேலஞ்சர்ஸ். அனில் கும்பிளே, விராட் கோலி மற்றும் பாப் டூபிளசிஸ் என கேப்டன்கள் மாறினாலும் ஐபிஎல் சாம்பியன் கோப்பை மற்றும் அந்த அணிக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சென்னை மற்றும் மும்பை அணிகள் முறையே நான்கு, ஐந்து முறை சாம்பியன்களாக ஆகிவிட்டனர். ஆனால், ஐபிஎல் தொடங்கும்போதெல்லாம் வலுவான அணியாக தோன்றும் ஆர்சிபிக்கு பிளே ஆஃப் மற்றும் குவாலிபையர் சுற்றுகள் எல்லாமே அலர்ஜியாக இருக்கிறது.
வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற போட்டியில் தான் ஆர்சிபி அணியினர் சொதப்புவார்கள். இது பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பொருந்தும். இந்நிலையில் இந்த ஆண்டாவது ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டும் அந்த அணியினர் நினைக்கிறார்களோ இல்லையோ ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தான் மற்ற அணி ரசிகர்களின் கேலி கிண்டல்களை தாங்கிக் கொண்டு வடுவாக நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள். வீரர்கள் கூட ஏலத்திம்போது மாறிவிடுகிறார்கள். ஆனால், அந்த அணிக்காக இருக்கும் ரசிகர்கள் காலங்கள் கடந்தும் தங்களின் பிரியங்களை காட்டி வருகிறது.
அதனுடைய இன்னொரு வெளிப்பாடு தான் இந்த வாழைப்பழ பிரார்த்தனை. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் கிராமத்தில் தமிழகத்தின் திருப்பதி என்னும் தக்சன திருப்பதி, வெங்கடரமணசாமி கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைப்பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்திய நிலையில், ஆர்சிபி கிரிக்கெட் ரசிகர்களும் வழிபாடு நடத்தினர். அந்த கோயிலை பொறுத்தவரைக்கும் மனதில் நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்றால் தேர் மீது வாழைப்பழத்தை எரிந்தால் நடக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி, வாழைப்பழத்தில் ‘ஈ சலா கப் நம்தே’ என எழுதி தேர் மீது எரிந்து ஆர்சிபி ரசிகர்கள் வேண்டுதல் நடத்தினர்.