காரைக்கால்: காரைக்காலில் ஓன்றரை ஆண்டுக்குப்பின் கொரோனா தொற்றால் பெண் உயிரிழந்துள்ளார். காரைக்காலை சேர்ந்த 35 வயது பெண் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இணை நோய்கள் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100-க்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கும் மேற்பட்டவருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.13 லட்சம் கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவால் இதுவரை 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்காலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா மரணத்தால் அப்பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர்.