தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று அரசு அதிகாரிகளுடன் சென்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் அரசின் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மக்களிடமும் அரசின் திட்டங்கள் கிடைக்கப் பெறுகிறதா என்று விசாரித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ் செரப்பனஞ்சேரி ஊராட்சி, ஆரம்பாக்கம் பகுதியில் 640 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
அதே போல் ஆதனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ 30.87 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவ புரம் பகுதி-1 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்துரையாடல் நடத்தினார்.
இந்த ஆய்வின் போது அரசு முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் மா.மூர்த்தி, திட்ட இயக்குநர் சா.செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தலைமைச் செயலாளர் இறையன்புவின் பணிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற விவாதமும் கோட்டை வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இறையன்பு ஓய்வு பெற்றாலும் அவருக்கு வேறு ஏதேனும் பதவி கொடுத்து அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.