சென்னை: “மாபெரும் இசைமேதை இளையராஜாவையே ‘தலித்’ எனக் கூறியவர்கள்தானே நீங்கள்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் களத்தில் பாஜகவையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வருபவர்களில் ஒருவராக சீமான் இருந்து வருகிறார். அதேபோல, தீவிர காங்கிரஸ் எதிர்ப்பையும் தனது கொள்கைகளில் ஒன்றாக வைத்திருப்பவர் சீமான். பாஜகவும், காங்கிரஸும் இருவேறு கட்சிகள்தானே தவிர, அவற்றின் கொள்கைகள் ஒன்றுதான் என சீமான் பல முறை தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், தற்போது சீமான் எடுத்து வரும் அரசியல் நிலைப்பாடுகள் அனைவரையும் உற்று கவனிக்க செய்துள்ளன. குறிப்பாக, ராகுல் காந்தியின் தகுதிநீக்க விவகாரத்தில் கொந்தளித்து பேசியிருந்தார் சீமான். ராகுலுக்கு இழைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அநீதி எனவும் அவர் கூறியிருந்தார். சீமானின் இந்த காங்கிரஸ் ஆதரவு கருத்து பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது.
முதன்மையான உணவு மாட்டுக்கறி..
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய சீமான், மாட்டிறைச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது: நாகரீகம் அடைந்த நாடுகளில் முதன்மையாக உணவாக இருப்பதே மாட்டுக்கறிதான். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே மாட்டுக்கறியை உண்பார்கள். அவ்வளவு ஏன்.. இந்தியா ஏற்றுமதி செய்வதிலேயே மாட்டிறைச்சிதான் அதிகம். முஸ்லிம், கிறிஸ்தவ நாடுகளுக்கு தான் அவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தாழ்த்தப்பட்டவர்களின் உணவா..
நானும் மாட்டுக் கறி சாப்பிடுபவன்தான். நகரத்திற்கு வந்த பிறகு மாட்டுக்கறியைதான் அதிகம் சாப்பிடுகிறேன். மாட்டிறைச்சி விலை குறைந்த உணவு என்பதுடன், ஊட்டச்சத்து மிகுந்த உணவு ஆகும். உழைக்கும் மக்களுக்கு மாட்டுக்கறியை விட வலிமை தரும் உணவு ஏதும் கிடையாது. தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே சாப்பிடும் உணவாக மாட்டிறைச்சியை கருதக்கூடாது. ஆடு, கோழியை மட்டும் உண்பீர்கள்.. அவ்வளவு பெரிய மாடை சாப்பிட மாட்டீர்களா.. உணவி ஜாதி பேதம் என்றெல்லாம் கிடையாது.
இளையராஜா..
இன்று ஏழையாக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் 10 ஆண்டுகளில் பெரிய பணக்காரராக.. ஏன் அதானியாக கூட மாற முடியும். ஆனால், இன்று பறையராக ஒருவர் இருக்கிறார் என்றால், எவ்வளவு பெரிய பணக்காரர் ஆனாலும் அவர் பறையர் தான். இளையராஜாவை விட புகழ்பெற்ற இசை மேதை இந்த நாட்டில் இருக்கிறார்களா.. உலக அளவில் திறமையான 10 இசையமைப்பாளர்களை தேர்ந்தெடுத்தால் அதில் 2வது, 3வது இடத்தில் இளையராஜா இருப்பார்.
ஜாதி இழிவு..
ஆனால், நீங்கள் (மத்திய அரசு) என்ன செய்தீர்கள். அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கும் போது தலித்திற்கு பதவி கொடுக்கிறோம் என்றீர்கள். இவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் ஜாதி இழிவு ஒழியவில்லை.. இதையெல்லாம் என்னவென்று சொல்வது. இவ்வாறு சீமான் கூறினார்.