சேலம்: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளன. சமீபகாலமாக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில தான் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருகின்றனரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதிலை கமலாலயம் கவனிக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணியில் உள்ளன. சமீபகாலகமாக இந்த கூட்டணியில் பிரச்சனை இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இருகட்சிகளின் தலைவர்கள் வெளிப்படையாக சில கருத்துகளை கூறி வருவது தான் கூட்டணியில் விரிசல் இருப்பதை உறுதி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவில் இருந்து வருபவர்களை அதிமுக சேர்க்க கூடாது என பாஜக தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதிமுக அவர்களை இணைத்து கொள்கிறது. இந்த விஷயத்திலும் இருகட்சிகள் இடையே மனஸ்தாபம் இருக்கிறது.
அதிமுகவில் இணைந்த பாஜகவினர்
அதாவது பாஜகவில் ஐடி விங்க் தலைவராக இருந்த நிர்மல் குமார் கடந்த மாதம் 5ம் தேதி பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை 420 மலை என கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்து பல நிர்வாகிகள் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் சேர்ந்தனர். பாஜக ஐடி விங்க் செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி பிரிவு மாநில செயலாளர் அம்மு என்ற ஜோதி, அறிவுஜீவி பிரிவு முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி மாநகர் மாவட்ட துணை தலைவர் விஜய், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில செயலாளர் லதா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் வைதேகியும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அதேபோல் பாஜகவின் சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த 13 பேர் அக்கட்சியில் இருந்து கூண்டாக விலகினர்.
எடப்பாடியிடம் கேள்வி
இது பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மேலும் அதிமுகவின் செயல்பாட்டை ஒட்டுமொத்தமாக பாஜக விரும்பவில்லை. இந்நிலையில் சேலத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வர உள்ளனரா? என கேள்வி எழுப்பப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி பதில்
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛எனக்கு தெரிந்து அப்படி ஒன்றும் இல்லை. அவ்வப்போது அனைத்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். அதிமுக உள்பட அனைத்து கட்சிகளிலும் பிற கட்சியினர் இணைந்து வருகின்றனர். இது ஜனநாயகமாகும். மேலும் அவர்களின் மனதை பொறுத்தது மட்டுமின்றி வேறு கட்சிகளில் இணைவது என்பது அவர்களின் உரிமையாகும்” என்றார். பாஜகவில் இருந்து வருபவர்களை அதிமுக இணைக்க கூடாது என கமலாய நிர்வாகிகள் நினைக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இப்படி தெரிவித்துள்ளார்.
அனைவரும் இணைய அழைக்கிறோம்
மேலும் சமீபத்தில் திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், ‛‛அதிமுகவில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது. மீண்டும் அதிமுகவில் இணையும்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. நான் தான் மறுத்துவிட்டேன்” என்றார். இதுபற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல.. அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருசிலரை தவிர அனைவரும் தாய் இயக்கத்துக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளோம்” என்றார். இதில் ஒருசிலர் என்பது ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.