அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அம்மன் கோயில் திருவிழாக்களையொட்டி, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு விற்பனை செய்ய அழகிய, அசத்தல் பொம்மைகளை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. வரும் 4ம் தேதி பொங்கல் விழாவும், 5ந் தேதி அக்னிச்சட்டி மற்றும் பூக்குழி, நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடக்கிறது.
மேலும், புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவும் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாக்களில் பக்தர்கள் குழந்தை வரம் கேட்டல், திருமண தடை நீங்குதல், தீராத நோய்கள் குணமடைய வேண்டுதல் உள்ளிட்ட வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி அம்மனுக்கு விரதம் இருந்து திருவிழாவின்போது அக்னிச்சட்டி எடுத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், நேர்த்திக்கடன் பொம்மைகள் செலுத்துவார்கள். இதனால், நேர்த்திக்கடன் பொம்மைகள், அக்னிச்சட்டி தயாரிக்கும்பணி அருப்புக்கோட்டை பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அருப்புக்கோட்டை மணி நகரம் குலாலர் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறியதாவது, கோயில் திருவிழாவையொட்டி நடக்கிற பிள்ளை, தவக்கிற பிள்ளை, அக்னிச்சட்டி, கால், கை, பாதம், ஆயிரங்கண் பானை, ஆகியவற்றை நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர். அம்மனுக்கு உகந்த அனைத்து வித நேர்த்திக்கடன் பொருட்கள் தயார் செய்து கொடுக்கிறோம். பொம்மைகள் அக்னிச்சட்டிகள் செய்து அதை நன்றாக உலர வைப்போம். இங்கு தயாரிக்கப்படும் இந்த அக்னிச்சட்டிகள் விருதுநகர், கமுதி, கல்லூரணி, தாயமங்கலம், இருக்கன்குடி, ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களுக்கு இங்கே இருந்து வாங்கி செல்கின்றனர். மண்பாண்ட பொருட்களுக்கு தேவையான மண்ணை நீர்நிலைகளில் இருந்தே எடுக்கிறோம்.
பொம்மைகளை சுடுவதற்கு வைக்கோல், வறட்டி என அதிக செலவு பிடிக்கிறது. வெளியூர்களில் இருந்து மண் எடுத்து கொண்டு வரப்படுகிறது. ஒரு மாதத்திற்கு குடும்பத்தோடு வேலை செய்கிறோம். போதிய லாபம் கிடைக்கவில்லை. போதிய மண் கிடைக்கவில்லை. மண்பாண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் மண்பாண்ட தொழில் செய்ய தராளமாக மண் அள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தும் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. பானைதொட்டி, விளக்கு செய்ய மெசின் வந்து விட்டது. எனவே, எங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்’ என்றார்.