திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணி 2வது நாளாக இன்றும் நடந்தது. மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தமும், 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, இந்த குளத்தில் பக்தர்கள் இறங்கவும், புனித நீராடவும் அனுமதியில்லை. மேலும், 2 தீர்த்தங்களை சுற்றிலும் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்போது மட்டும், கோயில் குளத்துக்குள் இறங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் நேற்று திடீரென செத்து மிதந்தன. அதனை பார்த்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். தொடர்ந்து, குளத்தில் மிதந்த மீன்களை கோயில் ஊழியர்கள் அகற்றினர். ஆனாலும், முழுமையாக அகற்ற இயலவில்லை. இதைத்தொடர்ந்து மீன்களை அகற்றும் பணி 2வது நாளாக இன்றும் நடந்ததும். கோயில் ஊழியர்கள் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வெப்பம் தாங்காமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மீன்கள் செத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே கோயில் குளத்தில் மீன்கள் இறந்தது குறித்து கோயில் நிர்வாகம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும், மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மூலம் தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.