தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் காப்புக்காடுகள் நிறைந்த பகுதியாக இருக்கின்றன. இந்த வனப்பகுதியில், ஏராளமான யானைகள் இருக்கின்றன. கடும் வெயிலினால் வனமே வறட்சியின் பிடியில் சிக்கி, காணுமிடமெல்லாம் பசுமையின்றி காட்சியளிப்பதால், ஏராளமான யானைகள் தண்ணீர், உணவு தேடி, அங்குள்ள சின்னாறு பகுதியில் முகாமிட்டிருக்கின்றன.
கடந்த ஒரு வாரமாக, கோடுபட்டி சின்னாறு வனப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக முகாமிட்டிருக்கின்றன. சின்னாறு பகுதிக்கு தண்ணீர் குடிக்க யானைக்கூட்டம் வந்தபோது, எட்டு வயதுள்ள பெண் யானை சேற்றில் சிக்கிக்கொண்டது. வெகுநேரம் போராடிய அந்த யானை, சேற்றிலிருந்து மீளமுடியாமல் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.

இன்று, சின்னாற்றில் யானையின் உடல் மிதந்து வந்ததை அறிந்து, ஒகேனக்கல் வனசரக அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் யானையின் உடலை மீட்டனர். கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில், யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, யானையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. நேற்று, ஒகேனக்கல் போடூர் வனப்பகுதியில் விஷக்காய்களை உட்கொண்டு, 8 வயதான ஆண் யானை மரணித்தது.
தருமபுரியில் கடந்த இரண்டு மாதங்களுக்குள், சட்டவிரோத மின் வேலியில் சிக்கி, 3 யானைகள், மின் கம்பியில் சிக்கி ஒரு யானை மரணித்திருக்கின்றன. இப்படி, தருமபுரியில் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து யானைகள் மரணித்து வருவது, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.