திமுக எம்எல்ஏ ஓட்டிய அரசு பேருந்து விபத்தில் சிக்கியது..! நடந்தது என்ன?

காஞ்சிபுரம் அருகே கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அக்குடியிருப்பில் வசிக்கும் மகளிர்களுக்காக  புதியதாக மகளிர் பேருந்து சேவை  துவக்கி வைக்கும் நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பங்கேற்று கொடியசைத்து புதிய மகளிர் பேருந்து சேவையினை தொடக்கி வைத்தார்.

பின்னர், அப்பேருந்தினை  தானே இயக்கினார். பேருந்தில் காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், திமுக காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அப்பகுதி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள், மகளிர்கள், முதியவர்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ அப்பேருந்தினை குடியிருப்பிற்கு வெளியே ஓட்டி சென்றார். அப்போது  சிறிய வளைவில் பேருந்தினை அவர் திருப்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக அந்த வளைவில் பேருந்து விபத்தில் சிக்கியது. 

அதாவது அந்த வளைவில் இருந்த சிறிய பள்ளத்தில் பேருந்தின் சக்கரம் சிக்கியதுடன், மின் கம்பத்தின் ஸ்டே ஒயரிலும் மோதி விபத்துக்குள்ளானது. உடனடியாக பேருந்துக்குள் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காஞ்சிபுரம் திமுக எம்எம்ஏ சிவிஎம்பி எழிலரசன் பத்திரமாக இறங்கினார். பின்னர் அங்கிருந்தவர்கள் அனைவரின் உதவியுடன் பேருந்து பள்ளத்தில் இருந்து மீட்கபட்டு, அரசுப் பேருந்து ஓட்டுநர் இயக்கத்தில் அனைவரும் குடியிருப்புகளுக்கு திரும்பினர். பேருந்து இயக்க விழாவில் எம்எல்ஏவால் பேருந்து விபத்தில் சிக்கியது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.