சென்னையில் படித்த இளைஞர்கள் மற்றும் பட்டதாரி பெண்களை ஆசை வார்த்தை கூறி நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் சீரடி ஸ்ரீ சாய் சொலுஷன்ஸ் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் தினேஷ் குமார் பல பட்டதாரி பெண்களிடம் படித்த இளைஞர்களிடம் நல்ல கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர் சம்பளத்தில் வேலை வாங்கி தரப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வலையை விரித்துள்ளார்.
இதை நம்பிய மாணவர்கள் கல்வி சான்றிதழ்களுடன், முன்பணமாக 2000 ரூபாயை செலுத்தி உள்ளனர். இதை தொடர்ந்து ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று சிறுக சிறுக வேலைவாய்ப்பு நிறுவனம் கேட்ட பணத்தையும் மாணவர்கள் தந்ததாக தெரிகிறது.
சில வாரமாக பூட்டி கிடந்த அலுவலகத்தை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், தலை மறைவாகிய தினேஷை தேடி வருகின்றனர். மேலும், தினேஷ் வீட்டில் சோதனை செய்துள்ள போலீசார் சில முக்கிய ஆவணம் உள்ளிட்ட ஒரு சில பொருட்களையும் கையகப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, மாணவர்களிடம் பணமோசடி செய்த தினேஷ், சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் உயர் அடுக்குமாடி இடத்தை சொந்தமாக வாங்கி உள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தினேஷின் மோசடி வேலைகளுக்கு உடந்தையாக இருந்த மகேஸ்வரி என்ற பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர்.