மத்திய அரசின் அடாவடித்தனம்! தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மார்க்சிஸ்ட் கே பாலகிருஷ்ணன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதை கைவிட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கு கனிம வளங்கள் அவசியம் தான். அதேசமயம், விவசாயத்தை அழித்து கனிம வளம் எடுப்பது உணவுப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் என்கிற காரணத்தினால் தான் தமிழ்நாடு சட்டமன்றமே தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பிறகு அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

அனைத்தும் தனியார்மயம் என்கிற குறிக்கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக அரசாங்கம், விமான நிலையம், துறைமுகம், என்.ஐ.நிறுவனம், எல்.ஐ.சி., தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே நிலையங்கள், ரேசன் கடைகள் என்று ஒவ்வொன்றையும் தனது கூட்டாளிகளுக்கு விற்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இதன் தொடர்ச்சியே தற்போது டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது. 

இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து இம்மக்களை ஓட்டாண்டியாக்கி விடும்.  தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி இதை செயல்படுத்துவது மாநில உரிமையை மீறிய செயலாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதை தொடரும் பட்சத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இணைந்து இதனை முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை சீரழிக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை தடுத்துநிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.