வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பிளஸ் 2 வரலாற்று பாட புத்தகத்தில் இருந்து முகலாயர்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் என்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
இப் பாட புத்தகத்தில் திருத்தங்கள் செய்வதாக என்.சி.இ.ஆர்.டி., என்ற கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அறிவித்தது. இதன்படி வரலாற்று பாட புத்தகத்தில் முகலாயர்கள் தொடர்பான சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் முகலாயர் தொடர்பான வரலாற்றை மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து என்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி கூறியதாவது:
பள்ளிக் கல்வி பாடதிட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை என்.சி.இ.ஆர்.டி., வழங்கி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பல பிரச்னைகளை சந்தித்தனர். பாடதிட்டங்கள் அதிகமாக இருப்பதாக புகார்கள் வந்தன. அதன்படியே பாடதிட்டங்கள் திருத்தப்பட்டன.பாடங்களின் அளவைக் குறைக்கவும், படிப்பதற்கு சுலபமாக இருக்கவும் ஒரே தகவல் பல இடங்களில் வருவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியிட்டு நிபுணர்கள் உதவியுடன் பாடதிட்டங்கள் திருத்தப்பட்டன. மாணவர்களின் நலனுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கம் கடந்தாண்டே அளிக்கப்பட்டது.
அந்த மாற்றங்களை சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் தற்போது செய்துள்ளது. இதற்காக புதிய பாட புத்தகங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
கடந்தாண்டு திருத்தப்பட்டவையே தற்போதும் தொடர்கிறது.
ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அதுபோன்ற எந்த அரசியல் எண்ணமும், நிபுணர் குழுவுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement