திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட திமுக கூட்டணியில் வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. காந்திராஜன் பேசிய பேச்சுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கை: 2 ஆண்டுகளாக கோவிலூர் மருத்துவமனை மரத்துக்கடியில் செயல்படுகிறது. கோவிலூர் ஊராட்சித்தலைவர் செல்வமணி நடராஜன் ஒரு பழைய சமுதாயக்கூடத்தில் மருத்துவமனை செயல்பட அனுமதித்துள்ளார். இடிந்த இந்த மருத்துவமனையை கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை போராட்டம் நடத்தியுள்ளது. பழனி துணை சுகாதார அதிகாரி மருத்துவர் அனிதாவிடம் பல முறை மனுக்கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அந்த கையெழுத்து பெற்ற மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக கடந்த மாதம் மார்ச் 2ம் தேதி கூட்டம் நடத்தி மருத்துவமனையை கட்டச்சொல்லி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக கவன ஈர்ப்பு சாலை மறியல் போராட்டம் கோவிலூரில் நடத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். இந்த மறியலை அடுத்து பழனி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஊராட்சி மன்றத்தலைவர், குஜிலியம்பாறை வட்டாட்சியர், எரியோடு காவல் ஆய்வாளர், சிபிஎம் தலைவர்கள் டி.முத்துச்சாமி, பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, ராகேஷ், உள்ளிட்டோர் கலந்துகொண்ட சமாதானக் கூட்டத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. விரைவில் மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதிப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையிலே போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு ஒருகோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மருத்துவமனை கட்ட ஒதுக்கீடு செய்யவில்லை. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தையடுத்து அதிகாரிகள் பரிந்துரை பேரில் கிடைத்ததாகவே கருதுகிறோம். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்து கொண்டு பேசிய வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் சிபிஎம், மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக சீப் பாலிட்டிக்ஸ் என்றும், பிளாக்மெயில் பாலிடிக்ஸ் என்றும், கேவலமான பாலிட்டிக்ஸ் என்றும் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வேடசந்தூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியதால் பல நன்மைகள் கிடைத்துள்ளன. உதாரணமாக வேடசந்தூரில் அரசு கல்லூரி துவங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளின் மாநாடுகளில் தீர்மானங்கள் போட்டதோடு அதற்கான போராட்டங்களையும் முன்னின்று நடத்தியதால் இன்றைக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதே போல் வேடசந்தூர் தாலுகாவில் இருந்து குஜிலியம்பாறை தனித்தாலுவாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குஜிலியம்பாறை ஒன்றியம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. இரு சக்கர வாகன பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஜமாபந்தி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பல முறை மனுக்கொடுக்கப்பட்டது. உண்ணாவிரதம் நடத்தப்பட்டதன் விளைவாக அன்றைய ஆட்சியாளர்கள் போராட்டத்திற்கு பணிந்து குஜிலியம்பாறை தனித்தாலுவாக அறிவித்தனர்.
அதே போல் வேடசந்தூர் வட்டத்தில் கடுமையாக வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டு விவசாயம் அழிவுறும் நிலையில் அப்பகுதியில் வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர் ஒன்றியங்களில் உள்ள பாசன குளங்களுக்கு காவிரியின் உபரி நீரை குழாய்கள் மூலம் நிரப்ப வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச்செயலாளர் எ.ராஜரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் முன்வைக்கப்பட்ட போது பல அரசியல் கட்சிகள் கேலியும் கிண்டலும் செய்தார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அயராத போராட்டம் காரணமாக இந்த கோரிக்கையை கடந்த ஆட்சியின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம் சட்டமன்றத்தில் பேசினார். அன்றைய அதிமுக அரசும் அதனை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்யப் போவதாக அறிவித்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதசார்பற்ற கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் காந்திராஜனிடம் இதே கோரிக்கையை வலியுறுத்திதன் அடிப்படையில் தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதும் காவிரி உபரி நீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து வேடசந்தூர் பகுதி நீர்நிலைகளில் சேர்ப்பதாக வாக்குறுதியளித்தார். இந்த நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் இத்திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கும் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜனுக்கும் நன்றி தெரிவித்து போஸ்டர் நோட்டிஸ் வெளியிட்டுள்ளோம். கடந்த 2006ம் ஆண்டு முதல் நாங்கள் இக்கோரிக்கைகாக போராடி வருகிறோம். மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கைகள் நிறைவேறுகிற போது அதை நன்றி தெரிவித்து பாராட்டுகிற தரமான நாகரீகமான அரசியலைத்தான் முன்னெடுத்து வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான விடாப்பிடியான போராட்டங்களை நடத்தி வருவது மக்களுக்கு தெரியும். இது இவ்விஷயத்தில் காந்திராஜனின் நற்சான்றிதழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேவையில்லை. தமிழகத்தில் மதவெறி சக்திகள் காலூன்றுவதற்கு கடுமையான முயற்சிகள் எடுத்துவரும் சூழலில் மதசார்ப்பற்ற கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டிய இடத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரின் இத்தகைய பேச்சுக்கள் அவதூறுகள் மதசார்பற்ற அரசியலை முன்னெடுப்பதற்கு பயன்படாது என்பதையும் கவனப்படுத்துகிறோம். இவ்வாறு சிபிஎம் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.