புதுடெல்லி: ‘‘பாஜக சொல்வது பற்றியே எப்போதும் என்னிடம் கேள்வி கேட்பது ஏன்? என கேள்வி கேட்ட நிருபரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கோபமாக கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது எம்.பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிபதி, ராகுலுக்கு ஜாமீன் வழங்கினார்.
ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான போது, அவருடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உட்பட 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காங்கிரஸார் நாடகமாடி வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் அடுத்த பட்டியல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, ராகுல் காந்தி டெல்லியில்உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு நேற்று வந்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், வீரப்ப மொய்லி, ரன்தீப் சுர்ஜேவாலா, உட்பட பலர் வந்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘நீதித்துறைக்கு காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்றார்.
இதனால் கோபம் அடைந்த ராகுல், ‘‘பாஜக என்ன சொல்கிறது? என்று எப்போதும் நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பது ஏன்?‘‘ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘அதானியின் போலி நிறுவனங்களில் ரூ.20,000 கோடி யார் முதலீடு செய்தது. இது யார் பணம்? இவைகள் எல்லாம் பினாமிகள் பணம்’’ என பதில் அளித்தார்.