சென்னை: மனைவியால் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட சென்னை விமான நிறுவன ஊழியரின் உடல் இன்று (புதன்கிழமை) தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த கொடூரத்தை நிகழ்த்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதாகும் ஜெயந்தன் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள தனது சகோதரி ஜெயகிருபா வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார் ஜெயந்தன்.
கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மதியம் நங்கநல்லூரில் உள்ள தனது அக்கா ஜெயகிருபா வீட்டில் இருந்து வேலைக்காக சென்னை விமான நிலையத்துக்கு ஜெயந்தன் புறப்பட்டு சென்றார். அவர் வேலைக்கு போகும்போதே, பணி முடிந்ததும், அப்படியே சொந்த ஊரான விழுப்புரம் போய்விட்டுதான் வருவேன் என்று தன் அக்காவிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
செல்போன்
ஆனால் அதன்பிறகு ஜெயந்தன் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அவரது சொந்த ஊருக்கும் போகவில்லை. தன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அக்கா, செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் ஜெயந்தனின் செல்போன் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில் பழவந்தாங்கல் போலீசார், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவைகளை வைத்து ஆய்வு நடத்தியபோது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது.
பாலியல் தொழில்
போலீஸ் விசாரணையில் ஜெயந்தன் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலவாயல் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1-ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமியை பிடித்து விசாரித்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண், முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்திருக்கிறார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார்.
கோவளம் கடற்கரை
மேலும் ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டப்பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்துச்சென்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை ஜெயலட்சுமி கூறியிருக்கிறார். இந்த கொலைக்கு, தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் பாக்யலட்சுமி கூறியிருக்கிறார்.
கருத்து வேறுபாடு
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜெயந்தன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அப்போது பாலியல் தொழில் செய்து வரும் அழகி பாக்கியலட்சுமி அறிமுகமாகி உள்ளார். பின்னர் ஜெயந்தன் அவருடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் ஜெயந்தன் கடந்த 2020-ம் ஆண்டு பாக்கியலட்சுமியை விழுப்புரத்தில் உள்ள மயிலம் கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாக்கியலட்சுமி ஜெயந்தனை விட்டு பிரிந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார்.
ஆத்திரம்
இதற்கிடையே கடந்த மாதம் 18-ந்தேதி புதுக்கோட்டை சென்ற ஜெயந்தன் பாக்கியலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியலட்சுமி தனது ஆண் நண்பர் சங்கருடன் சேர்ந்து ஜெயந்தனை அடித்து கொலை செய்திருக்கிறார்.பின்னர் அவரது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி பாலித்தீன் கவரில் சுருட்டி கட்டப்பையில் வைத்து கொண்டு கடந்த மாதம் 20-ந்தேதி அதிகாலை பேருந்து மூலம் சென்னை கோவளம் கடற்கரைக்கு வந்து புதைத்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை சென்றுள்ளார்.
பூசாரி வேல்முருகன்
அதன்பின்னர் கடந்த 26-ந்தேதி தலை மற்றும் வயிற்றுப்பகுதியை வெட்டி பாலிதீன் கவரில் சுருட்டி சூட்கேசில் வைத்து கொண்டு வாடகை காரில் மீண்டும் கோவளத்திற்கு வந்தார். அங்கு தனக்கு பழக்கமான கோவளத்தை சேர்ந்த பூசாரி வேல்முருகன் என்பவரை வரவழைத்து இருசக்கர வாகனத்தில் சென்று கோவளம் பகுதியில் மற்ற உடல் பாகங்களை புதைத்து விட்டு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று மீட்பு
இதனிடையே போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து கோவளத்திற்கு அழைத்து சென்று ஜெயந்தனை புதைத்ததாக கூறப்படும் இடத்தை தோண்டி உடலை மீட்கும் பணியை மேற்கோண்டு வருகின்றனர். கொலைக்கு உடந்தையாக இருந்த பூசாரி வேல்முருகன் என்பவரை போலீசார் கோவளத்தில் கைது செய்துள்ளனர் விமான நிறுவன ஊழியரின் உடல் பாகங்கள் கோவளம் பூமிநாதர் கோவில் அருகே உள்ள சதுப்பு நிலங்கள் அடர்ந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில் கோவளத்தில் புதைக்கப்பட்ட உடல்களை நேற்று தோண்டி எடுக்க போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, கோவளம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கேளம்பாக்கம் போலீசார் அங்கு காத்திருந்தனர். ஆனால் யாரும் வராததால் உடல் பாகங்களை தோண்டி எடுக்கும் பணி நேற்று நடைபெறவில்லை. இன்று உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
குழப்பம்
பாக்கியலட்சுமியின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்மளாப்பட்டி. அவர் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கூறுகையில், கொலை வழக்கில் கைதாகி உள்ள பாக்கியலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்சொந்த ஊரில் தங்காமல் பெரும்பாலும் சென்னையிலேயே இருந்திருக்கிறார். அவ்வப்போது இங்கு வந்து செல்வது வழக்கம். தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து சென்னை அழைத்து சென்றனர். தற்போது இங்கு வந்த போது தான் ஏற்பட்ட தகராறில் ஜெயந்தனை கொலை செய்ததாக அங்குள்ள போலீசாரிடம் கூறியிருக்கிறார். ஜெயந்தனை எப்படி கொலை செய்தார். அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டியது எப்படி என்பது எங்களுக்கு மர்மமாக உள்ளது. சென்னை போலீசார் முழுமையான விசாரணை நடத்திய பின் தான் அதன் விவரம் தெரியவரும் என்றார்கள்.
யார் போடுவது
இதனிடையே விமான நிறுவன ஊழியர் ஜெயந்தன் கொலை வழக்கை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக போலீசார் இடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம். அவர் மாயமானதாக முதலில் சென்னை பழவந்தாங்கல் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் கொலை செய்ததாக கூறப்பட்ட இடம் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் எல்லையில் வருகிறது. மேலும் உடல் பாகங்களை புதைத்த இடம் கோவளம் பகுதி கேளம்பாக்கம் போலீஸ் எல்லையில் வருகிறது. தற்போது இந்த கொலை தொடர்பாக யார் வழக்கு போடுவது என்பதில் குழப்பம் நிலவுவதால் வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.