புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலம் நாது லாகணவாய். சீன எல்லை அருகே உள்ள இந்த இடம் தரைமட்டத்தில் இருந்து 14,140 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அழகான இயற்கை காட்சிகளை காணலாம்.
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா சீசனில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு சாங்கு என்ற இடத்துக்கு அருகே ஜவஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல்கல் பகுதியில் நேற்று காலை பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 அல்லது 6 வாகனங்களில் சென்ற 20 முதல் 30 பேர் சிக்கினர். இவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 4 மணி வரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த இடத்தின் சாலையை பனிச்சரிவு முற்றிலும் மூடியதால், இங்கிருந்து வெளியேற முடியாமல் 350-க்கும் மேற்பட்டோர் தங்கள் வாகனங்களில் சிக்கி தவித்தனர். அங்கு உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ராணுவத்தினர் மேற்கொண்டு பனிச்சரிவை அகற்றினர். அதன்பின் அவர்கள் மீட்கப்பட்டனர். காணாமல் போனவர்கள் பனிச்சரிவுக்குள் சிக்கியுள்ளனரா என ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
சாங்கு பகுதியை தாண்டிச் சென்றால், பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்றுலா பயணிகளுக்கு உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதையும் மீறி 15-வது மைல்கல் என்ற இடத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்று பனிச்சரிவில் சிக்கியுள்ளனர்.