வில்லியம்சனுக்கு பதில் ஷனாகா!
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டியில் ஃபீல்டிங் செய்த போது, குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சனுக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். தற்போது இவருக்கு பதிலாக, இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை குஜராத் டைட்டன்ஸ் அணி, 50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், ஆல்-ரவுண்டரான தசுன் ஷனகா, தனது முதல் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.
ஐபிஎல்-லிலிருந்து விலகும் மற்றொரு வீரர்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதார், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த நடப்பு 2023 ஐபிஎல் சீசனிலிருந்து விலகவதாக அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு விளையாடிய இவர், 8 போட்டிகளில் 333 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் இரண்டு அரைசதங்களும் அடங்கும். அதே 2022 சீசனின் ப்ளே ஆஃப் போட்டியில், லக்னோ அணிக்கு எதிராக 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார், என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக்கை முந்திய சாய் சுதர்சன்!
நேற்று நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, சாய் சுதர்சனின் நிதானமான ஆட்டம். இவர், 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் ஐபிஎல்-லில் தனது முதல் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும், இந்த ஒரே ஆட்டத்தின் மூலம் இவரது பேட்டிங் சராசரி (Batting Average), 33.4 ரன்களிலிருந்து 45.8 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி 38.46 ரன்கள் பேட்டிங் சராசரியுடன் இருந்தார். இதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக “அதிகபட்ச பேட்டிங் சராசரி கொண்ட இந்திய வீரர்” என்ற சாதனையை படைத்துள்ளார், சாய் சுதர்சன்.
“டாட் பால்”-இல் சாதித்த ஷமி!
நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் குறிப்பாக, முகமது ஷமி 4 ஓவர்களில் 15 டாட் பால்களை வீசினார். இந்த நடப்பு 2023 ஐபிஎல் சீசனில் மொத்தமாக 28 டாட் பால்களை வீசியுள்ளார். இதன் மூலம் இந்த 2023 ஐபிஎல் தொடரில் “அதிக டாட் பால்களை வீசியவர்கள்” பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மார்க் வுட், 26 டாட் பால்களை வீசியுள்ளார்.
லக்னோ மேட்ச்களுக்கு டிக்கெட் விலை குறைப்பு!
ஐபிஎல் 2023 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, தனது சொந்த மண்ணான லக்னோவில், 7 ஆட்டங்களில் விளையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 1ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸுடன் லக்னோ அணி, தனது சொந்த மண்ணில் மோதியது. இன்னும் மீதமுள்ள 6 ஆட்டங்கள் லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த மேட்ச்களுக்கு மைதான டிக்கெட்டின் ஆரம்ப விலை 499 ரூபாயிலிருந்து 349 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.