சென்னை: பங்குனி உத்திரம் பெளர்ணமி நாளில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி உள்ளதால் இனி அதிமுக ஓஹோ என வளரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட நிகழ்வுகள், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கு ஆகியவை குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்த, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் வரும் ஏப்.7-ம் தேதி பகல்12 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த செயற்குழு கூட்டம், ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் விநியோகிக்கப்படுகிறது. இதன்படி, விண்ணப்பப் படிவங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, “தற்போது அதிமுகவில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். அதை இரண்டு கோடியாக உயர்த்துவதே இலக்கு. 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று பௌர்ணமி மற்றும் பங்குனி உத்திரம். இந்த நல்ல நாளில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி உள்ளதால் அதிமுக ஓஹோ என வளரும்.” என்று தெரிவித்தார்.