சென்னை: இத்தனை நாட்கள் இல்லாமல், திடீரென திமுகவின் திராவிட மாடலை ஓபிஎஸ் தரப்பு வரவேற்றிருக்கிறது.. அதுமட்டுமல்ல, மகளிருக்கு அறிவித்த 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தையும் பாராட்டியிருக்கிறது.. என்னவா இருக்கும்?
தமிழக மக்களால் கடந்த 2 வருடங்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார்.
வேதனை வானதி
தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது… ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது ஏன்? என்றுதான் புரியவில்லை என்று கேட்டிருந்தார் அமமுகவின் டிடிவி தினகரன்.. எந்த அடிப்படையில், தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்படுவர் என்று பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் கேட்டிருந்தார்.
இழி அரசியல்
1000 ரூபாயை எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்வீர்கள் என்று இந்த அனைத்து எதிர்க்கட்சியினரும் கேள்வியை கேட்டு வரும்போது, நாம் தமிழர் கட்சி சீமான் மட்டும், இதைவிட ஒருபடி மேலே போய், “எங்கள் வீட்டு பெண்களுக்கு உரிமை தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க நீ யார்?” தேர்தல் வாக்குறுதியில் தகுதி என்ற வார்த்தையே இல்லையே ஏன்? என்று காட்டமாக கேள்வியை எழுப்பினார்.. இப்படியான விமர்சனங்களும், வாதங்களும், குற்றச்சாட்டுகளும், அரசியல் தளத்தில் வெடித்து வரும்போது, இந்த உரிமைத்தொகை 1000 ரூபாய் அறிவிப்பு என்பதை வைத்து, சோஷியல் மீடியாவில் “இழிஅரசியல்” கையில் எடுக்கப்பட்டு வந்தது… இப்படிப்பட்ட சூழலில், ஓபிஎஸ் டீம், திமுகவின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது. இது ஆச்சரியத்தையும் கிளப்பி வருகிறது.
திராவிட மாடல்
ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருது அழகுராஜ் திராவிட மாடல் அரசின் இந்த தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் உரிமை தொகை வழங்குவதற்கு பாராட்டியிருக்கிறார். “மகளிருக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை வழங்குவோம் என்கிற திமுகவின் பிரதான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை தமிழக முதலமைச்சர் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் தகுதியுடைய பெண்களுக்கு வழங்கப்படும் என்னும் அடிக்கோடிட்ட அம்சத்தை பிடித்துக் கொண்டு பலரும் அரசை விமர்சிக்கிறார்கள். வழக்கம்போல வலைதளங்களில் கேலி கிண்டல் செய்கின்றனர்.
நியாயமற்ற வாதம்
அனைத்து மகளிருக்கும் என்று சொல்லி விட்டு இப்போது தகுதியுடையோருக்கு என்று சொல்லலாமா என்னும் கேள்வியை எதிர்கட்சிகள் முன்வைக்கின்றன. இது நியாயமற்ற வாதம். உதாரணமாக அனைவருக்கும் கொரானா தடுப்பூசி போடப்படும் என அரசாங்கம் சொன்ன போதும் குழந்தைகள் சிறுவர்களுக்கு அதனை போடவில்லையே என்று கேட்க முடியாது. காரணம் இயற்கையிலேயே குழந்தைகள் சிறார்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருப்பதால் அது அவசியப்படாமல் போகிறது. அது போலத் தான் மக்கள் நலத் திட்டங்கள் அனைவருக்கும் என அறிவிக்கப்பட்டாலும் அது அவசியப்படாத அளவில் பொருளாதாரத்தில் மேம்பட்ட குடும்பங்களை கழித்து விட்டு தான் அத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேல்மட்ட பதவி
அந்த வகையில் மாதம் ஆயிரம் உதவித் தொகை என்பது நலிந்த நடுத்தர வர்க்கத்தினருக்குத் தான் முக்கியமாகிறது. முதலமைச்சர் எதிர்கட்சித் தலைவர் சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பச்சைமையில் கையெழுத்து போடும் பதவிகளில் இருப்பவர்கள் அரசு ஊழியர்கள் மேல்மட்ட பதவிகளில் இருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர்கள் வருமானவரி செலுத்தும் அளவுக்கு உயர்நிலை பொருளாதார பிரிவுகளில் இருப்போர்.. என பல படி நிலைகளில் இருப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை ஆயிரம் என்பது அவசியமில்லாதது என்பதே உண்மை.
மாறும் கலர்
இதற்கு மாறாக அனைவருக்கும் ஆயிரம் தந்தால் அது அரசின் ஊதாரித்தனம் என்பது மட்டுமன்றி ஆளும் அரசை வழிநடத்தும் கட்சியை ஆதரிப்பதற்காக மக்களுக்கு தரப்படும் லஞ்சமாக அது கருதப்பட்டுவிடும். எனவே செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் முதல் அமல்படுத்த இருக்கிற மாதம் ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகை திட்டத்தை தகுதிகளை நிர்ணயம் செய்து உரியவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படவேண்டும். பசி ஏப்பக் காரர்களுக்கு உணவும் புளிச்ச ஏப்பக் காரர்களுக்கு செரிமான மருந்தும் தரப்படுவது தான் ஒரு அறிவார்ந்த அரசின் செயல்பாடாக வேண்டும். அந்த வகை அரசாக திராவிட மாடல் அரசு இருக்கட்டும்” என்று தெரிவித்துள்ளர்.
பச்சோந்தி
ஏற்கனவே, திமுக அரசுக்கு ஓபிஎஸ் ஆதரவாக இருப்பதாகவும், கடுமையாக ஆளும் கட்சியை விமர்சிப்பதில்லை என்று, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.. திமுக – ஓபிஎஸ் டீமுக்கு இடையே மறைமுக உறவு இருப்பதாகவும், “பச்சோந்தி”யை அதிக நிறம் மாறக்கூடியவர் ஓபிஎஸ் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கடுமையாக விமர்சித்திருந்தார்.. அத்துடன், திமுகவின் பினாமியாக இருந்து கொண்டு, அதிமுகவை உடைத்து கொண்டிருப்பதாகவும் ஓபிஎஸ்ஸை தாக்கி பேசி வரும்நிலையில், இன்றைய தினம் திமுகவின் திராவிட மாடலை ஓபிஎஸ் டீம் பாராட்டியிருப்பது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
முட்டுச்சந்து
அதுமட்டுமல்ல, “மக்கள் செல்வாக்கோ நட்சத்திர அந்தஸ்த்தோ பிறரை வசீகரிக்கும் அறிவு ஆற்றலோ குறைந்த பட்சம் அனைவரையும் அரவணைத்து செல்லும் தாயுமாணவ தலைமைப் பண்போ கடுகளவும் இல்லாத எடப்பாடி என்கிற தனிமனிதனின் அதிகார வெறியும் அபகரிப்பு முயற்சியும் தான் முக்கடல் சூழ்ந்த பாரததத்தின் மூன்றாம் பெரும் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை இப்படி ஒரு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது” என்று மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வரும்நிலையில், திமுகவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது, எடப்பாடி தரப்பை மேலும் டென்ஷனாக்கி வருகிறதாம்.