புதுடெல்லி: விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்களின் நலன்களுக்காக உழைத்து வரும் இந்த அரசு, ராம ராஜ்ஜியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னாள், அரசு அதிகாரியான தீரஜ் பாத்நாகர் எழுதிய ‘ராம்சரித் மனாஸ்’ என்ற கவிதை தொகுப்பின் இந்தி மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங். “கடவுள் ராமர் காட்டிய லட்சியப்பாதையில் எங்களால் நடக்க முடிந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களின் நலன்சார்ந்து நாங்கள் பணி செய்துவருகிறோம்.
நான் உங்களைத் தவறாக வழிநடத்த விரும்பவில்லை. நாட்டில் முழுமையாக ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்திவிட்டோம் என்று நான் கூறமாட்டேன். ஆனால் நிச்சயமாக நாங்கள் அந்தப்பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
முன்பெல்லாம் உலக அரங்கில் இந்தியா பேசினால் அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாது. தற்போது இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கான மரியாதை உயர்ந்திருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் பேச்சு உற்று கவனிக்கப்படுகிறது. கடவுள் ராமனின் வாழ்க்கை வரலாறு இந்த அரசாங்கத்திற்கு வெளிச்சமாக இருந்து வழிகாட்டுகிறது”. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ராமர் கோயில் இந்தாண்டு பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படும்” என்றார்.