நிலக்கரி சுரங்க திட்டத்தை தடுத்து நிறுத்த வதற்கான நடவடிக்கைகளை தேவை- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் மத்திய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களுக்கான அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் இன்று தமிழக சட்டசபையிலும் ஒலித்தது. இதனையடுத்து மத்திய அரசின் அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது மிக முக்கியமான பிரச்சனை. விவசாயிகளுடைய வாழ்வாதார பிரச்சனை. மத்திய அரசு 101 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்டு அதில் மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே நெய்வேலி என்எல்சி நிறுவனம் கிட்டத்தட்ட 105 கிராமங்கள் எடுக்கப்பட்டு விட்டன. அந்த பொன் விளைகின்ற பூமிகள் எல்லாம் அழியக்கூடிய சூழ்நிலை. அந்த பகுதி விவசாயிகளை அப்புறப்படுத்த கூடிய சூழ்நிலையில் புதிதாக மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவித்தும் டெண்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது விவசாயிகள் மத்தியில் மிக மிக கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசேரி, சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, மைக்கேல் பட்டி ஆகிய மூன்று இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு உண்டான டெண்டர் அறிவிக்கப்பட்டு செய்திகளில் வந்துள்ளன. இது அந்த பகுதி மக்கள், விவசாயிகள் இடத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நாங்கள் அறிவித்தோம். தமிழ்நாட்டின் உணவுத் தேவைகளை டெல்டா மாவட்டம் பூர்த்தி செய்கிறது. இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட பிறகு அதில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு தொழிற்சாலையும் அங்கு அமைக்க கூடாது என்பதுதான் வேளாண் பாதுகாப்பு சட்டத்தின் முக்கிய அம்சம்.

அப்படி இருக்கின்ற போது மத்திய அரசாங்கம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது விவசாயிகளிடத்திலே வேதனையையும், வருத்தத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதெல்லாம் இப்பொழுது அல்ல ஏற்கனவே நாடாளுமன்றத்தில் 2022 நவம்பரில் திமுக எம்பி கேள்வி எழுப்பு உள்ளார். அதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். அப்பொழுதே இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளதாக தெரிய வருகிறது.

அப்போதே இந்த விடியா அரசு விழித்துக் கொண்டு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதையெல்லாம் இந்த அரசு தவற விட்டுவிட்டது. 

அதோடு இன்றைக்கு முதலமைச்சர் கூட சட்டமன்றத்தில் பதிலளித்தார் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறினார். 2011 இல் திமுக ஆட்சியில் மீத்தேன் புரிந்துணர் ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் தான் விவசாயிகள் பாதிக்கக்கூடிய இப்படிப்பட்ட திட்டத்திற்கு திறந்து விட்டனர்.

அதில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை வேளாண் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். அன்றைக்கு தடை செய்யாமல் இருந்திருந்தால் மத்திய அரசு இப்படிப்பட்ட திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டார்கள்.

தமிழ்நாட்டின் உடைய பிரச்சனைகளை சட்டமன்றத்தில் இருந்து பேசி தீர்வு காணலாம். இதை மத்திய அரசிற்கு உட்பட்ட பிரச்சனை. மத்திய அரசுக்கு உட்பட்ட பிரச்சனை என்பதால் கடிதம் எழுதினால் போதாது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது நான் முதலமைச்சராக இருந்தபோது அடிக்கடி பத்திரிகைகளும் ஊடகங்களிலும் இப்போது இருக்கிற முதலமைச்சரை எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுகிறார் என்றார். இவர் மட்டும் இப்போது என்ன செய்கிறார்? அவரும் கடிதம் தான் எழுதி வருகிறார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த 38 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். விவசாயிகளின் மிகப் பெரிய வாழ்வாதார பிரச்சனை, டெல்டா மாவட்டம் பாலைவனமாக ஆகிவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் இருந்து கொண்டுள்ள இந்த வேலையில் திமுகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் இதை எழுப்ப வேண்டும்.

திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்களுடைய கடமையை செய்ய வேண்டும். விவசாயிகள், மக்கள் பாதிக்கப்படுகின்ற போது நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமூச்சோடு செயல்பட வேண்டும். 

இந்த அரசும் விவசாயிகள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக வேகமாக துரிதமாக இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதே டெல்டா காரர் தான் மீத்தேன் ஒப்பந்தத்திற்கு புரிந்துணர் ஒப்பந்தம் போட்டவர். பொன் விளையும் பூமியை பாதுகாத்தது அதிமுக. நாங்கள் கொண்டு வந்து அமல்படுத்திய திட்டத்தை சட்டத்தை பாதுகாத்தால் போதும். சட்டசபையில் பேசி பிரயோஜனம் இல்லை நாடாளுமன்றத்தில் பேசணும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தை பாதுகாக்க துப்பில்லை தெம்பு திராணி இல்லை நாடாளுமன்றத்தில் கடிதம் எழுதின என்று கூறாமல் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.