கேரளாவிலிருந்து செயல்பட்டு வந்த மீடியா ஒன் தொலைக்காட்சி சேனலை ‘மத்யமம்’ என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்தி வந்தது. 10 ஆண்டுகளுக்கு இந்த சேனலுக்கு உரிமம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உரிமம் காலாவதியானது.
உரிமத்தை புதுப்பிக்க வேண்டி சேனல் தரப்பில் விண்ணப்பித்த போது நாட்டின் பாதுகாப்பு கருதி உரிமத்தை புதுப்பிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை இது என்று விமர்சனங்கள் எழுந்தன.
சேனல் தரப்பில் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கேரளா உயர் நீதிமன்றம் மத்திய அரசின் முடிவை ஏற்று மீடியா ஒன் சேனலின் மனுவை தள்ளுபடி செய்தது.
கேரளா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சேனல் தரப்பிலும், கேரளா பத்திரிக்கையாளர்கள் சங்கத் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
நட்டின் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கேரளா உயர்நீதிமன்றம் நியாயப்படுத்தியதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அடிப்படை உரிமையை மறுக்க கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் மீடியா ஒன் சேனலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.