புதுடெல்லி: காங்கிரஸ் ஃபைல்ஸ் என்ற பெயரில் 3-வது பகுதி வீடியோவை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. இதில் 2012-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பான தகவல்களை பாஜக வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பதவி காலத்தில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காங்கிரஸ் ஃபைல்ஸ் என்ற பெயரில் வீடியோ ஒன்றை பாஜக மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது பதவி காலத்தில் ரூ.4.82 லட்சம் கோடி ஊழல் செய்து உள்ளது என்று அந்த வீடியோவில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் ஃபைல்ஸின் 2-வது பகுதி வீடியோ வெளியானது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் என்றால் ஊழல் என்ற தலைப்பில் 3-வது வீடியோவை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்காலத்தில் 2012-ல் நடந்த நிலக்கரி ஊழல் குறித்து பட்டியலிடப்பட்டு உள்ளது. நிலக்கரி ஊழல் காரணமாக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவப்பெயர் ஏற்பட்டது. இந்த ஊழலுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல், ஆழமாகவும் செயல்பட்டது என்று பாஜக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது.3 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கங்களில் பாஜக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் காமன் வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக 4-வது வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
Congress Files के तीसरे एपिसोड में देखिए,
कोयले की दलाली में काले हुए ‘हाथ’ की कहानी… pic.twitter.com/am9L8C4hQs
— BJP (@BJP4India) April 4, 2023