பெண்களுக்கான வுமன்ஸ் ப்ரீமியர் லீக் போட்டிகள் சமீபத்தில்தான் நடந்து முடிந்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி அந்தத் தொடரை வென்று சாம்பியனாகியிருந்தது.
ரசிகர்களின் வரவேற்பு உட்பட அத்தனை விதத்திலுமே இந்தத் தொடர் சூப்பர் ஹிட்! இந்நிலையில் இந்தத் தொடர் முழுவதுமே அத்தனை போட்டிகளிலும் வர்ணனையாளராக பங்கேற்று கலக்கியிருந்த தமிழக வீராங்கனைகள் ஆர்த்தி சங்கரன் மற்றும் நிரஞ்சனா நாகராஜன் ஆகியோரோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வுமன்ஸ் ப்ரீமியர் லீக் பற்றி அவர்கள் பேசியவை..
“நாங்கள் கிரிக்கெட் ஆடிய காலத்தில் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தடுமாறியிருக்கிறோம். போட்டிகளில் ஆட வெவ்வேறு ஊர்களுக்கு பயணிக்க கடும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போதுள்ள வீராங்கனைகளுக்கு வுமன்ஸ் ப்ரீமியர் லீக் போன்ற பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளம் வீராங்கனைகளெல்லாம் ஏலத்தில் பெரிய தொகைக்கு சென்றிருந்தனர். நல்ல வாய்ப்பும் பொருளாதாரரீதியான பலன்கள் என இரண்டுமே ஒருங்கிணைந்து கிடைக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் பெருமையாக இருக்கிறது. வுமன்ஸ் ப்ரீமியர் லீகை தாமதமாக தொடங்கினார்கள் எனும் விமர்சனம் இருக்கிறது. ஆனால், இது சரியான நேரத்தில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் இப்போதுதான் பெண்கள் கிரிக்கெட்டுக்கென ஒரு வெளி உருவாகியிருக்கிறது. இந்திய அணியும் பெரிய பெரிய தொடர்களில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறதும். இந்த சமயத்தில் சரியாக இந்தத் தொடரை தொடங்கியிருக்கிறார்கள். இனி கிரிக்கெட் ஆடத் தொடங்கும் பெண்கள் ஒரு பெரும் நம்பிக்கையோடு மைதானத்திற்கு வருவார்கள்.’ என்றார்.
இதுகுறித்து நிரஞ்சனா நாகராஜனிடமும் பேசினேன். தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் பெரிதாக இந்தத் தொடரில் ஆடவில்லையே? எனும் கேள்வியை கேட்டேன். ‘தமிழகத்திலிருந்து பெரிதாக வீராங்கனைகள் யாரும் ஆடவில்லைதான். ஆனால், இந்த முறை ஹேமலதா என்றொருவர் ஆடியிருந்தார். முதல் தொடரிலேயே தன்னுடைய பெயரை அழுத்தமாக பதியச் செய்யும் அளவுக்கு ஆடியிருந்தார். அவர் பலருக்குமே ஊக்கமாக இருந்திருப்பார். அடுத்தடுத்த தொடர்களில் ஹேமலதா போல இன்னும் பல வீராங்கனைகள் வருவார்கள்’ என நம்புகிறேன் என்றார் நிரஞ்சனா!