கேரளாவில் ஓடும் ரயிலில் தீ; 3 பேரின் உயிரை பறித்த கொடூர கொலைக்காரன் சிக்கியது எப்படி?

சைக்கோ கொலைக்காரர்கள் பலரை வரலாறு கண்டுள்ளது. அதில் சமீபத்திய அப்டேட்டாக உள்ளே நுழைந்திருப்பவர் ஷாருக். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழா – கண்ணூர் எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் D1 பெட்டியில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சக பயணிகள் மீது ஒரு நபர் பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துள்ளார்.

கேரள ரயிலில் நடந்த பயங்கரம்

வேகமாக பரவிய தீ பயணிகள், இருக்கைகள், உடைமைகள் மீது பற்றியது. அப்பெட்டியில் இருந்து கரும்புகை கிளம்பியது. பயணிகள் மத்தியில் அலறல் சத்தம் கேட்டது. இந்த கோர சம்பவத்தில் ஒரு பெண், பச்சிளங் குழந்தை, ஒரு ஆண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றவர்கள் மோசமான தீக்காயங்கள் உடன் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தீயில் சிக்கி அலறிய பயணிகள்

இதையடுத்து எலத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. தீ பற்றிய பெட்டி மட்டும் அகற்றப்பட்டு மற்ற பெட்டிகளுடன் ரயில் கண்ணூர் சென்றடைந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. பெட்ரோல் ஊற்றி சக பயணிகளை எரிக்கும் அளவிற்கு என்ன விரோதம்? எனத் தெரியவில்லை.

என்.ஐ.ஏ போலீசார் தீவிரம்

தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க என்.ஐ.ஏ போலீசார் களத்தில் இறங்கினர். ரயில் பெட்டியில் இருந்து தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலை சம்பவத்தின் போது அப்பெட்டியில் இருந்த நபர்களிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக கேரள போலீசார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குற்றவாளியை கண்டுபிடிக்க உதவினால் 2 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேடுதல் வேட்டை

அந்த மர்ம நபரின் உத்தேச வரைபடம் பல்வேறு காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் இருந்து 1,000 கிலோமீட்டர் தொலைவில் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் தான் கேரள ரயிலில் தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த நபரின் பெயர் ஷாருக் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே அமைச்சர் தகவல்

அவரிடம் அடுத்தகட்டமாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயிலில் தீ வைத்து கொலை செய்த குற்றவாளி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட மாநில அரசு, காவல்துறை, ரயில்வே போலீசார், என்.ஐ.ஏ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.