இந்தியாவில் கடந்த வாரம் ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது, மேற்கு வங்கம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறைத் தாக்குதல் அதிகமாக இருந்தது. இந்த தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்து சகோதரர்களிடம் ஒப்படைக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ராம நவமி வன்முறை குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில்,” இந்தியாவில் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில், இஸ்லாமியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வன்முறை செயல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாகக் கடந்த மார்ச் 31-ம் தேதி பீகாரில் நடந்த வன்முறையில் முஸ்லிம்களின் மதரஸா-வும், நூலகமும் எரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற காழ்ப்புணர்ச்சி நிகழ்வுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். முஸ்லீம்களை குறி வைத்து தாக்குவதான் வெளிப்பாடாகவே இதைக் கருதுகிறோம்.
இது போன்ற செயல்களைத் தூண்டுபவர்கள், குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, கண்ணியத்தை உறுதிப்படுத்தவும், இந்தியாவை இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு தலைமைச் செயலகம் கேட்டுக்கொள்கிறது” எனத் தெரிவித்திருக்கிறது.
இதற்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி,”ராம நவமி கொண்டாட்டத்தின் போது பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகம் குறி வைக்கப்பட்டதாகக் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இந்தியாவின் நற்பெயருக்குச் சேதம் விளைவிக்கிறது.
இந்த அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வகுப்புவாத மனநிலை, இந்தியாவுக்கு எதிரான செயல்திட்டத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு. இந்தியாவில் நடந்த பிரச்னைகளில் தவறான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.