சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையம் (Global NCAP) நடத்திய பாதுகாப்பு தர மதிப்பீடு சோதனையில் மாருதி சுசூகி ஆல்டோ K10 கார் இரண்டு நட்சத்திர மதிப்பீட்டையும், வேகன் ஆர் கார் ஒற்றை நட்சத்திர மதிப்பீடு மட்டுமே பெற்று குழந்தைகளுக்கான பாதுகாப்பில் இரு கார்களும் பூஜ்யம் மதிப்பீட்டை பெற்று தோல்வி அடைந்துள்ளது.
Maruti Suzuki Alto K10
புதிய மாருதி சுசூகி ஆல்டோ K10 காரினை சோதனைக்கு உட்படுத்தியதில் இரண்டு நட்சத்திர வயது வந்தோருக்கான பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குளோபல் NCAP ஆனது, புதிய ஆல்டோ கே10 கார் மிக பலவீனமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
வயது வந்தோருக்கான பாதுகாப்பில் சாத்தியமான 34 புள்ளிகளில் 21.67 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இதில் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் சோதனை மற்றும் பக்கவாட்டில் தடை ஏற்படுத்தி சோதனை ஆகியவை முறையே 8.2 புள்ளிகள் மற்றும் 12.4 புள்ளிகளை மட்டுமே பெற்றன.
முன்பக்க ஆஃப்-செட் தாக்க பாதுகாப்பிற்காக, ஆல்டோ கே10 தலைக்கு நல்ல அளவிலான பாதுகாப்பை வழங்கியது, இருப்பினும் மார்பு மற்றும் தொடை பாதுகாப்பு ஓரளவுக்கு பலவீனமாக இருந்தது. பக்கவாட்டு மோதல் சோதனையில் தலை மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல பாதுகாப்பை வெளிப்படுத்தியது. இருப்பினும் மார்புக்கு மோசமான பாதுகாப்பு உள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில், ஆல்டோ K10 பெறவேண்டிய 49 புள்ளிகளில் வெறும் 3.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே 0 மதிப்பீட்டை பெற்றது
ஆல்டோ K10 காரில் 3 வயது குழந்தைக்கு இணையான டம்மியுடன் சோதனை செய்யப்பட்டது, பெரியவர்களுக்கான இருக்கை பெல்ட்களுடன் முன்னோக்கி எதிர்கொள்ளும் குழந்தை இருக்கைகளில் அமர்ந்திருந்தது, இது தாக்கத்தின் போது அதிகமாக முன்னோக்கி நகர்வதனை தடுக்கவில்லை, தலைக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
அடுத்து, 18 மாத குழந்தை டம்மி பெரியவர்களுக்கான சீட் பெல்ட்களுடன் பின்புறமாக எதிர்கொள்ளும் வகையில் குழந்தை இருக்கைகளுடன் சோதிக்கப்பட்டது, மேலும் தலைக்கு நல்ல பாதுகாப்பை கொடுத்தாலும் மார்புக்கு பலவீனமான பாதுகாப்பை வழங்கியது.
Maruti Wagon R Global NCAP
மாருதி சுசூகி வேகன் ஆர் காரினை சோதனைக்கு உட்படுத்தியதில் 1 நட்சத்திர வயது வந்தோருக்கான பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. குளோபல் NCAP ஆனது, புதிய வேகன் ஆர் கார் மிக பலவீனமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பில் சாத்தியமான 34 புள்ளிகளில் 19.69 புள்ளிகளை மட்டுமே பெற்றது. இதில் முன்பக்க ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் சோதனை மற்றும் பக்கவாட்டில் தடை ஏற்படுத்தி சோதனை ஆகியவை முறையே 6.7 புள்ளிகள் மற்றும் 13 புள்ளிகளை மட்டுமே பெற்றன.
ஓட்டுநருக்கு கழுத்துக்கு ‘நல்ல’ பாதுகாப்பும், தலைக்கு ‘போதுமான’ பாதுகாப்பும் அளிப்பதாக குறிப்பிடத்தக்கது. ஓட்டுநரின் மார்புக்கு மிக ‘பலவீனமான’ பாதுகாப்பும், அதே நேரத்தில் முழங்கால்களுக்கு மோசமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. டாஷ்போர்டின் பின்னால் உள்ள ‘ஆபத்தான முறை கட்டமைப்பில் முழங்கால்களுக்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்று சோதனை குறிப்பிட்டது.
குழந்தைகளின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில், மாருதி வேகன் ஆர் பெறவேண்டிய 49 புள்ளிகளில் வெறும் 3.40 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே 0 மதிப்பீட்டை பெற்றது.