செங்கல்பட்டு: கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கான பின்னணி தகவல்கள் கிடைத்து உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்து அமைந்து உள்ளது மூவரசம்பட்டு கிராமம். இங்குள்ள தர்மலிங்கேசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வந்து இருக்கிறது.
இந்த நிலையில், இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் குளத்தின் நீரில் இறங்கி இருக்கின்றனர். அப்போது சூர்யா, பானேஷ், ராகவன், யோகேஸ்வரன், ராகவன் ஆகிய ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அமைச்சர் ஆய்வு
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் அன்பரசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 5 பேரின் உடல்களையும் உறவினர்களிடம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த விபத்துக்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரபரப்பு பின்னணி
ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கியபோது அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 பேர் நீரில் மூழ்கிய குளம் சுமார் 40 அடி ஆழம் கொண்டது என்று கூறப்படுகிறது. மூவரசம்பட்டு கிராமத்துக்கு உட்பட இந்த குளத்தின் ஆழம் இதற்கு முன் குறைவாகவே இருந்து உள்ளது.
தூர்வாரப்பட்ட குளம்
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்தை தூர்வாரிய பிறகு அதன் ஆழம் அதிகரித்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். குளத்தின் ஆழம் 3 அடுக்குகளை கொண்டதாக இருந்துள்ளது. குளத்தின் மையப்பகுதி 40 ஆழம் கொண்டது என்றும், அதற்கு அடுத்த அடுக்கு 25 அடி ஆழம் கொண்டது என்றும், கரையை ஒட்டிய பகுதி 10 அடி ஆழம் உடையது எனவும் கூறப்படுகிறது.
நீச்சல் முறையாக தெரியாது
குளத்தில் இறங்கிய பலருக்கு நீச்சல் முறையாக தெரியாது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 5 பேர் உயிரிழந்த இந்த குளம் கோயிலுக்கு சொந்தமானது இல்லை என்றும் வேறு ஒரு கிராமத்துக்கு சொந்தமான குளம் எனவும் கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த குளத்தில் இதுபோன்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று வந்து உள்ளது.
காப்பாற்ற சென்றவர்களும் பலி
இன்று தீர்த்தவாரியின்போது குளத்தில் இறங்கிய அர்ச்சகர்கள் உட்பட 25 பேருக்கும் முறையாக நீச்சல் தெரியாத நிலையில், அவர்கள் கரையை ஒட்டிய ஆழம் குறைவான பகுதியில் இறங்கி இருக்கிறார்கள். அப்போது 3 பேர் தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். மூழ்கிய அவர்களை காப்பாற்ற 2 பேர் சென்றபோது அவர்களும் மூழ்கி இறந்துள்ளனர்.
போலீஸ் விளக்கம்
இதுகுறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், “இப்போது மூழ்கியவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர். 10 நாட்களாக இந்த விழா நடைபெற்று வருகிறது. 10 நாளுமே போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறோம். நாங்கள் நன்றாக பாதுகாப்பு வழங்கியதாக சொன்ன அதே வாயால், தற்போது இப்படி ஆகிவிட்டதே என்று சொல்கிறார்கள்.
2 முறை தீர்த்தவாரி
எங்களுக்கும் வருத்தமாகதான் உள்ளது. காலையில் கூட போலீஸ் பாதுகாப்புடன் தான் தீர்த்தவாரி எடுத்து உள்ளார்கள். 2வது முறையாக தீர்த்தவாரி எடுத்தபோதுதான் போலீஸ் நிற்கும்போதுதான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றார்.