இந்தி விவகாரங்களில் குரல் கொடுத்துவரும் திரை பிரபலங்களில் ஒருவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இந்தி எப்போதும் தேசிய மொழியாக இருக்கும் என்று இந்தி நடிகர் அஜய் தேவ்கன் கூறியபோது, `இந்தி ஒருபோதும் தேசிய மொழி கிடையாது’ என சுதீப் கூறியிருந்தார். இப்படியிருக்க கடந்த சில மாதங்களாகவே, சுதீப் அரசியலுக்கு வரப் போகிறார் எனப் பேச்சுக்கள் எழுந்தன.
அதுபற்றி அவரே, “அனைத்து அரசியல் தலைவர்களுடனும் எனக்குத் தொடர்பு இருக்கிறது. அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்புகளும் வருகின்றன. ஆனால், அரசியலில் இறங்காமலேயே சேவை செய்ய முடியும் என்கின்றபோது, நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்” என்று முன்பு கூறியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் மே மாதத்தில் நடக்கவிருக்கும் நிலையில், பா.ஜ.வு-க்காக மட்டுமே பிரசாரம் செய்வேன் என சுதீப் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுதீப், “இக்கட்டான நேரங்களில் பா.ஜ.க எனக்கு ஆதரவளித்திருக்கிறது. எனவே இப்போது பா.ஜ.க-வுக்கு நான் ஆதரவளிப்பேன். மேலும், பாஜவுக்காக மட்டுமே நான் பிரசாரம் செய்வேன். ஆனால், தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
என்னுடைய ஆதரவு முதல்வர் பசவராஜ் பொம்மைக்கே. அவர் எனக்கு காட் ஃபாதர். அவரை ஆதரிக்கிறேன் எனும்போது, அவர் பரிந்துரைத்த அனைத்தையும் ஆதரிப்பேன்” என்று கூறினார். மேலும், பா.ஜ.க-வின் சித்தாந்தத்துடன் உடன்படுகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “மோடி எடுத்த சில முடிவுகளை மதிக்கிறேன். ஆனால், இன்று நான் இங்கு அமர்ந்திருப்பதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று சுதீப் பதிலளித்தார்.
கர்நாடகாவில் ஓ.பி.சி இடஒதுக்கீட்டின் மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவிகித இடஒதுக்கீட்டை, கடந்த மாதம் பா.ஜ.க அரசு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.