5 இளம் அர்ச்சகர்கள் பலி! குவிந்த போலீஸ்… முதலமைச்சர் இரங்கல் – என்ன நடந்தது?

Chennai Nanganallur Five Priest Died: சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள மூவரசன்பேட்டையில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பல்லாக்கு தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்ற அர்ச்சகர்களாக பணிபுரியும் இளைஞர்கள், பங்குனி உத்தர தீர்த்தவாரி நிகழ்வையொட்டி, கோயில் அருகே உள்ள குளத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து, இளைஞர்கள் குளத்தில் இறங்கியபோது, 2 பேர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிகளுக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர்.

இதனைப் பார்த்த அருகில் இருந்த மூவரும் தண்ணீரில் மூழ்கிய, இருவரை காப்பாற்ற சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது, மேலும் ஆழமான பகுதிக்கு சென்றதால் அந்த மூன்று பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். இது குறித்து உடனடியாக பழவந்தாங்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை என மற்றும் காவல்துறையினர் இணைந்து உயிரிழந்த நிலையில் இருந்த சூர்யா, பாவனேஷ், ராகவன் மற்றும் லோகேஷ்வரன் உள்ளிட்ட ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. 

மேலும் விபத்து நடந்த இடத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்து நடந்த அந்த குளத்தில் சேறு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சேறு அதிகமாக இருந்த காரணத்தினாலும், ஆழம் சுமார் 25 அடி வரை இருந்ததாலும் ஐந்து பேர் ஆழத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. 

பங்குனி உத்தரவிழாவில் சாமியை குளிப்பாட்டுவதற்காக பலரும் குளத்தில் இறங்கியபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் ஆழம் அதிகமாக இருக்கும் அங்கே செல்ல வேண்டாம் என பலரும் கூறியதாகவும், அதையும் மீறி இளைஞர்கள் சென்றதால், சூழல் கைமீறிப்போய்விட்டதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவத்தை தொடர்ந்து, கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (22), பானேஷ்(22), ராகவன்(22), யோகேஸ்வரன் (21) மற்றும் ராகவன்(18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.