உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக எண்ணற்ற இயற்கை சீர்கேடுகளால் மக்கள் பல பிரச்னைகளுக்கு ஆளாவது அனைவரும் அறிந்ததே. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக்குழு (International panel discussion on climate change) காலநிலை மாற்றத்திற்கான காரணம், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிடும். இதுவரை ஐ.பி.சி.சியின் ஆறு மதிப்பீட்டுக்காலம் நிறைவடைந்துள்ளது.
இந்த காலநிலை பன்னாட்டுக் குழுவானது ஐக்கிய நாட்டுசபை மற்றும் உலக வானிலை அமைப்பும் இணைந்து 1988 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஐ.பி.சி.சி தற்போது ஆறாவது மதிப்பீட்டுக் காலத்தின் இறுதியில் உள்ளது. தன் ஆறாவது மதிப்பீட்டு காலத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் இறுதி ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஆறாவது மதிப்பீட்டுக்காலத்தின் இறுதியாக வெளியிடப்பட்ட “AR6 Synthesis Report: Climate Change 2023” என்றழைக்கப்படும் தொகுப்பு அறிக்கை, நம் புவியில் உயிரினங்கள் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் சவாலாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அறிக்கையில், புவி வெப்பநிலை அதிகரித்ததால் வளிமண்டலம், உயிர்மண்டலம் உள்ளிட்ட மண்டலங்களில் மோசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால், அதன் விளைவுகள் மோசமாக உள்ளன. இந்நிலையில் பெருந்தொற்று, போர் போன்ற காரணங்களால் புவி வெப்பநிலையின் விளைவுகளை கையாள முடியாத நிலையில் உலகம் உள்ளது. புவி வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நிதி ஆதாரங்கள் உலக நாடுகளிடம் இல்லை.
புவி வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்கெனவே அதிகம் பாதிப்படைந்த நாடுகள் மற்றும் எதிர்காலத்தில் பாதிப்பை சந்திக்ககூடிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களின் நலன்கள் மற்றும் சூழல் அமைப்புகள் குறித்து கூடுதலாக கவனத்துடன் இருக்க வேண்டும். வெப்பநிலை தணிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் மட்டுமே அனைத்து உயிர்களுக்குமான சமத்துவ பூமியை உருவாக்க முடியும். புவி வெப்பமடைதலைத் தடுக்க அனைத்து நாடுகளால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட திட்டங்களால் 2030-ம் ஆண்டுக்குள் சராசரி இயல்பு வெப்பநிலை 1.5°C அளவு உயர்வைத் தடுக்க முடியாது. தற்போது வெளியாகும் உமிழ்வை முடிந்தளவு சீக்கிரமாக எல்லாத்துறைகளிலும் சரி பாதியாக்கினால் மட்டுமே 2030-க்குள் வெப்பநிலை உயர்வதை கட்டுப்படுத்த முடியும்.
புவிவெப்பமடைதலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் தப்பிப்பதற்கு சில வாய்ப்புகளும் இருக்கின்றன.
பசுமை இல்லா வாயுக்கள் வெளிவருவதை கட்டுப்படுத்தவும் முடியும். சூழலியலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். புவிவெப்பமயமாதலை சரிசெய்ய மேற்கொள்ளும் சூழலியல் நடவடிக்கைகள் அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும்.
பூமியிலுள்ள கடல், நிலம், நன்னீர் ஆகிய பகுதிகளை முப்பது முதல் ஐம்பது சதவீதம் வரை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டும். மக்களின் அத்தியாவசிய சேவையான போக்குவரத்து, உணவு , மின் உற்பத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தி வாயுக்கள் உமிழ்வை குறைக்க வேண்டும் என்று ஐபிசிசி தெரிவித்துள்ளது
மனிதன், நாகரீகத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியடைந்தாலும் இயற்கையை தொடர்ந்து சீண்டினால் அதன் விளைவுகளை கையாள முடியாமல் மனித இனமும், கண்டுபிடித்த தொழில்நுட்பங்களும் காணாமல் போய்விடும்.