விருதுநகர்: கடன் விவகாரம்; மூவரைக் கடத்திப் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்- போலீஸில் சிக்கியது எப்படி?

விருதுநகரில், வாங்கிய கடனைத் திருப்பித் தராத மூன்று பேரை கடத்திய கும்பலை கொடைக்கானலில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர். இந்தப் பரபரப்புச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜாஃபர் அலி. இவரின் நண்பர் கண்ணபிரான். கண்ணபிரானின் தொழில் விருத்திக்காக மும்பையைச் சேர்ந்த அபு அலி என்பவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை ஜாஃபர் அலி கடன் பெற்றுக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடனாகக் கொடுத்தப் பணத்தை தனது தேவைக்காக அபு அலி பலமுறை திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு, ஜாஃபர் அலி, கண்ணபிரான் இருவரும் முறையான பதில் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

கார்கள்

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, ஜாஃபர் அலி, கண்ணபிரான் ஆகிய இருவரும் அவர்களுடைய மற்றொரு நண்பரான மாரிமுத்துவுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை எனத் தெரிகிறது. இதனால் பதற்றமடைந்த அவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்திருக்கின்றனர். அப்போது, ஜாஃபர் அலி குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய மர்மநபர்கள், `ஜாஃபர் அலி உட்பட மூன்று பேரையும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து காரில் கடத்தி வந்திருக்கிறோம். மூன்று பேரையும் பத்திரமாகத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமெனில், 10 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்’ எனக் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்கள்

இந்த மிரட்டல் குறித்து, ஜாஃபர் அலியின் உறவினர்கள் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் சபரிநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் உட்பட முக்கியச் சந்திப்புகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தும் சந்தேக நபர்கள் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். இந்த நிலையில், ஜாஃபர் அலி உறவினர்களுக்கு வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வுசெய்ததில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியிலிருந்து பேசுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற கூமாப்பட்டி போலீஸார், தனியார் ஹோட்டலில் பதுங்கியிருந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தனியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜாஃபர் அலி, கண்ணபிரான், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் மீட்கப்பட்டனர்.

கைது

பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கைதுசெய்யப்பட்டவர்கள் மும்பையைச் சேர்ந்த அபு அலி, திருமங்கலத்தைச் சேர்ந்த பிரகதீஸ்வரன், நிரஞ்சன், திருமலைக்குமார், பாபு, அருள், ரமேஷ் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. கடனாகக் கொடுத்தப் பணத்தை ஜாஃபர் அலி, கண்ணபிரான் ஆகியோர் திருப்பித் தராததால், அந்த ஆத்திரத்தில் அவர்களைக் கடத்தி, குடும்பத்தாரிடமிருந்து கடன் பணத்தை வசூல் செய்யத் திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.