சென்னை: Netizens Trolled Shankar’s Anniyan (ஷங்கரின் அந்நியனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்) இயக்குநர் ஷங்கரின் அந்நியன் பட காட்சிகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்த ஷங்கர் விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரை வைத்து அந்நியன் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட்டானது. மேலும் விக்ரமின் நடிப்பு பசிக்கும் செம தீனி போட்ட படமாக அது பார்க்கப்படுகிறது.
அந்நியன் அவதாரம் எடுத்த ஷங்கர்
ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஷங்கர் பாய்ஸ் படத்துக்கு சந்தித்த கடுமையான விமர்சனங்களை அடுத்து அந்நியன் படத்தை இயக்கினார். ஒருவருக்குள் நிகழும் மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் நோயை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில், அம்பி என்ற கதாபாத்திரம் சமூகத்தில் நடக்கும் ஊழல் செய்பவர்கள், சட்டத்திட்டங்களை மதிக்காதவர்களை அந்நியனாக அவதாரம் எடுத்து வேட்டையாடுவதுதான் படத்தின் ஒன்லைன்.
விமர்சனங்களை சந்தித்த ஷங்கர்
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என ஷங்கர் பெயர் எடுத்தாலும் அவரது முதல் படமான ஜெண்டில்மேனிலிருந்தே, ஷங்கர் எப்போதும் உயர் வகுப்பினர் என்று கருதப்படுபவர்களுக்குத்தான் படம் எடுப்பார். அவர்கள் பக்கம் நின்றுதான் இந்த சமூகத்தை பார்ப்பார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. உதாரணமாக, ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இட ஒதுக்கீடு குறித்து தவறான பார்வையை ஷங்கர் செலுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டை பலர் வைப்பார்கள்.
கமல் ஹாசனேக்கூட ஜெண்டில்மேன் கதையை கேட்டுவிட்டு படத்தின் கதை தப்பாக இருக்கிறது இதில் நான் நடிக்கவில்லை என்று ஒதுங்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட விமர்சனங்களை சந்தித்த ஷங்கர் அந்நியன் படத்தின்போது கடுமையாகவே விமர்சிக்கப்பட்டார்.
அம்பி ஏன் நந்தினியை கொல்லவில்லை?
இந்நிலையில் அந்நியன் படத்தின் காட்சிகளையும், அந்தப் படத்தின் இயக்குநர் ஷங்கரையும் நெட்டிசன்கள் காட்டமாக விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர். அதாவது, அந்நியன் படத்தில் தவறு செய்யும் அனைவரையும் அந்நியனாக மாறி அம்பி கொல்வார். அப்படி இருக்கும்பட்சத்தில் பத்திரப்பதிவில் முறைகேடு செய்யும் நந்தினியை ஏன் அந்நியன் கொல்லவில்லை என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி நந்தினி காதலி என்பதால் மட்டும் அம்பி என்கிற அந்நியன் அவரை உயிரோடு விடவில்லை. மேல்தட்டு வகுப்பை சேர்ந்தவர் என்பதால்தான் அவரை உயிரோடு விட்டுவிட்டார் எனவும் சிலர் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர்.
சார்லிக்கு ஒரு நியாயம்; சங்கீத சபா செயலாளருக்கு ஒரு நியாயமா?
அதேபோல் சார்லி கதாபாத்திரம் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கிறது. எனவே இவர்கள் பூமிக்கு பாரம் என்ற மைண்ட்செட்டில் சார்லிக்கு கொடூர தண்டனை கொடுத்து கொல்வார் அம்பி என்கிற அந்நியன். அதேசமயம், நந்தினி சங்கீத சபாவில் அரங்கேற்றம் செய்ய ஆசைப்படும்போது சிபாரிசு கேட்கும் சபாவின் செயலாளருக்கு சிறிய அளவிலான தண்டனை கொடுப்பதோடு நிறுத்திக்கொள்வார்.
நியாயப்படி பார்த்தால் பிறருக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல் தான் உண்டு தன் சோம்பேறித்தனம் உண்டு என்று இருக்கும் சார்லியை கொன்றதைவிட, ஒருவர் தனது திறமையை வெளிக்காட்டுவதற்கு சிபாரிசு வேண்டும் என்று கூறும் சங்கீத சபாவின் செயலாளரைத்தானே அந்நியன் கொன்றிருக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உயர் வகுப்பினர் மட்டும்தான் தவறை உணர்வார்களா?
தவறு செய்யும் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு வர்க்கத்தினரை மட்டும் அந்நியனை வைத்து ஷங்கர் வேட்டையாட வைத்தது எந்த விதத்திலும் அறம் ஆகாது. ஏன் நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும்தான் தவறுகள் செய்வார்களா? அதுமட்டுமின்றி நந்தினி மற்றும் சங்கீத சபா செயலாளரை அந்நியன் மன்னித்துவிடும் படி காட்சிகள் அமைத்த ஷங்கர் மற்றவர்களையும் மன்னித்து விடும்படி காட்சிகள் வைத்திருக்கலாமே என்ற கருத்தை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்நியன் கொல்லும் மற்றவர்கள் தங்களது தவறை நியாயப்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கும்; ஆனால் உயர் வகுப்பினர் என்று கூறப்படும் நந்தினியும், சங்கீத சபா செயலாளரும்தான் தங்களது தவறை உணரும்படி காட்சிகள் இருக்கும். எனில் உயர் வகுப்பினராக கருதப்படுபவர்கள் மட்டும்தான் தவறை உணர்வார்களா?. எனவே இந்த வேறுபாட்டின் மூலம் ஷங்கர் அந்நியன் படத்தை எவ்வளவு குறுகிய சிந்தனையுடன் எடுத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம் எனவும் சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.