பீஜிங் ‘அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீண்ட காலமாக அமெரிக்கா அங்கீகரித்து வருகிறது.
‘அங்குள்ள இடங்களின் பெயரை மாற்றுவதன் வாயிலாக, பிராந்திய உரிமை கோரும் சீனாவின் எந்தவொரு ஒருதலைபட்சமான முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை, திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என சீனா அழைக்கிறது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சீனா சூட்டி உள்ளது.
இந்த புதிய பெயர்கள் சீன, திபெத்திய மற்றும் பின்யின் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
”சீனா இது போன்ற அடாவடிகளில் ஈடுபடுவது முதல்முறை அல்ல; இதை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை,” என, நம் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதற்கு, நேற்று பதில் அளித்துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மவோ நிங், ”ஜங்னான், சீனாவுக்கு உட்பட்ட பகுதி இதை, மாகாண கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளுக்கு ஏற்ப, சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
”இது, சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது,” என, தெரிவித்துள்ளார்.
சீனாவின் இந்த அத்து மீறல் நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கேரைன் ழான்பியர் நேற்று முன்தினம் கூறியதாவது:
அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீண்ட காலமாக அமெரிக்கா அங்கீகரித்து வருகிறது.
மேலும், அங்குள்ள இடங்களின் பெயரை மாற்றுவதன் வாயிலாக, பிராந்திய உரிமை கோரும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.